சாலையோர மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு

குமாரபாளையம்:குமாரபாளையம்-இடைப்பாடி சாலையில், சாலையோர மீன் கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் உத்தரவுப்படி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் குமாரபாளையம் நகராட்சி அதிகாரிகள் இணைந்து சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது, 25 கிலோ கெட்டுப்போன மீன்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், சம்பந்தப்பட்ட சாலையோர மீன் வியாபாரிக்கு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உரிமம் பெறாமல் உணவு வணிகம் மேற்கொள்ள கூடாது என, நோட்டீஸ் வழங்கப்பட்டது.பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் கெட்டுப்போன அல்லது மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்ற மீன்களை விற்பனை செய்வது, விற்பனையாகாத மீன்களை மீண்டும் மீண்டும் சேமித்து விற்பனை செய்வது போன்ற செயல்கள், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம், 2006ன் கீழ் கடுமையான குற்ற மாகும். இதுபோன்ற விதிமீறல்கள் மீண்டும் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரங்கநாதன், லோகநாதன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்தனர்.

Advertisement