மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர் முகாம் 33 மாணவர்களுக்கு கிடைத்தது கல்லூரி அட்மிஷன்

கோவை: கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாணவர் சிறப்பு குறைதீர் முகாமில், 33 மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் நேரடி சேர்க்கை பெற்றனர்.

கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் நேற்று நடந்த முகாமை கலெக்டர் பவன்குமார் துவக்கி வைத்து, 10 மாணவர்களுக்கு ரூ.2.70 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கினார். முகாமில் பங்கேற்ற 265 மாணவர்களில், தகுதியின் அடிப்படையில் 33 பேர் நேரடியாக பல்வேறு கல்லுாரிகளில் அட்மிஷன் பெற்றனர்.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை மற்றும் ஸ்கிரைப் வசதி தகவல்கள் விளக்கப்பட்டன. தேவையான சான்றிதழ்களும் உடனடியாக வழங்கப்பட்டன.

அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் பாடப்பிரிவுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

கனரா வங்கி, எஸ்.பி.ஐ., மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட 12 வங்கிகள், கல்விக்கடன் கோரி விண்ணப்பித்திருந்த 12 மாணவர்களுக்குக் கடன் வழங்க ஒப்புதல் அளித்தன.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் செண்பகவள்ளி மற்றும் பிற அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

@quote@ பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எக்காரணம் கொண்டும் படிப்பைப் பாதியில் நிறுத்தக்கூடாது. உயர்கல்வி அல்லது தொழிற்திறன் சார்ந்த படிப்புகளில் கட்டாயம் சேர வேண்டும். இது தொடர்பான உதவிகளுக்கு, நம் அலுவலகத்தில் செயல்படும் உயர்கல்வி கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் -கலெக்டர் பவன்குமார்quote

Advertisement