குடியேறும் போராட்டம் நடத்திய டாஸ்மாக் ஊழியர்கள் கைது

கரூர்:கரூர் அருகே, டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்திய, 87 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச் சங்கம் சார்பில், பணி நிரந்தரம் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன், கரூர் தொழிற்பேட்டையில் உள்ள, டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில், மாநில செயலாளர் சிவக்குமார் தலைமையில், குடியேறும் போராட்டத்தில் ஈடுபட சென்றனர்.
இதையடுத்து, நான்கு பெண்கள் உள்பட, 87 பேரை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்து, மேலப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பிறகு, நேற்று மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Advertisement