குப்பைக்கு தீ வைப்பு ; பொதுமக்கள் அவதி

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை ஆங்காங்கே கிடைக்கும் இடங்களில் தேக்கி வைக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. அவ்வகையில், குடியிருப்புகளுக்கு மிக அருகாமையில் உள்ள இடங்களில் குப்பை கழிவுகள் கொண்டு சென்று கொட்டி குவிக்கப்பட்டுக் கிடக்கிறது.

மாநகராட்சி 34வது வார்டுக்கு உட்பட்ட மண்ணரை - மணியகாரம்பாளையம் ரோட்டில், நொய்யல் ஆற்றின் கரையை ஒட்டி, ஒரு பகுதியில் பெருமளவு குப்பை கழிவுகள் தேங்கிக் கிடக்கிறது.

இந்த குப்பையில் நேற்று மதியம் தீப்பிடித்தது. குப்பை கழிவில் ஏற்பட்ட தீயால், சுற்றுப்பகுதி முழுவதும் கடுமையான புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதனால், வாகன ஓட்டிகள், அருகில் வசிப்போர் புகையால் கடுமையான மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர். பொதுமக்கள் சிலர் கூறுகையில், 'சமீப காலமாக குப்பைக்கு தீ வைப்பது தொடர் கதையாகி வருகிறது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகமும் எவ்விதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை.

எரியும் குப்பையில் இருந்து வெளியேறும் புகையால் பலரும் மூச்சு விட முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை உரிய முறையில் கையாண்டால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்,' என்றனர்.

Advertisement