தமிழக கிராண்ட்மாஸ்டர் இனியன் சர்வதேச செஸ் தொடரில் ‘சாம்பியன்’

சென்னை: ஐரோப்பா நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் நடந்த ஆறாவது சர்வதேச ஓபன் செஸ் தொடரில், தமிழக கிராண்ட்மாஸ்டர் இனியன், ‘சாம்பியன்’ பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் ஆறாவது சர்வதேச லா பிளாக்னே ஓபன் செஸ் தொடர், பிரான்ஸ் நாட்டின் லா பிளாக்னே நகரில், ஜூலை 4ல் தொடங்கி 10-ம் தேதி வரை நடந்தது.

இதில் 20 நாடுகளைச் சேர்ந்த 13 கிராண்ட்மாஸ்டர்கள், 22 சர்வதேச மாஸ்டர்கள் உட்பட 142 முன்னணி வீரர் – வீராங்கனையர் பங்கேற்றனர். இந்த மாஸ்டர்ஸ் பிரிவுப் போட்டி ஒன்பது சுற்றுகளாக நடந்தது. இதில் இந்தியா சார்பில், தமிழகத்தைச் சேர்ந்த இனியன், 24, போட்டியிட்டார்.

போட்டி முடிவில், ஒரு ஆட்டத்திலும் தோல்வியடையாத இனியன் ஆறு வெற்றி, மூன்று டிரா என, 7.5 புள்ளிகள் பெற்று, தனிப்பெரும் முன்னிலையுடன் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

முதல் சுற்றில் ‘வாக்-ஓவர்’ பெற்ற அவர், இரண்டாவது சுற்றில் சமநிலை கண்டார். மூன்று, நான்காவது சுற்றுகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். ஐந்தாவது சுற்றில் டிரா செய்தார்.

அடுத்த மூன்று சுற்றுகளில் தொடர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அவரை இந்தியாவின் சர்வதேச மாஸ்டர் அரோண்யக் கோஷுக் எதிர்கொண்டார்.

இப்போட்டி டிராவில் முடித்தது. எனினும், புள்ளிகள் அடிப்படையில் இனியன், ‘சாம்பியன்’ கோப்பையை வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தாண்டில் மட்டும் தன் நான்காவது சர்வதேச பட்டத்தையும், இரண்டாவது கிளாசிக்கல் செஸ் பட்டத்தையும், இனியன் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

Advertisement