தமிழகத்தில் நல்ல மாற்றம் தெரிகிறது!

24



நமது நிருபர்




'லஞ்சம் யாருக்கும் கொடுக்காதீர்கள்... யாராவது கேட்டால் இது விஜய் ஆட்சி என்று சொல்லுங்கள்' என்று பேசி அனைவருக்கும் புதிய நம்பிக்கையை அளித்துள்ளார் முதல்வர் விஜய். இதுவரை எந்த முதல்வரும், பிரதமரும் இது போல் அறிவித்தது கிடையாது என்பதால் அவரது ஆட்சிக்கு, அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

பயத்தில் அதிகாரிகள்

இதுவரை அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது. இந்த ஆட்சியில் குறைந்துள்ளது. முதல்வர் விஜய் பேச்சு சாமானிய மக்களிடம் 100 சதவீதம் சரியாக சென்றுள்ளது. அரசு அதிகாரிகளும் பயத்தில் உள்ளனர். லஞ்சம் கேட்டால் முதல்வர் பேசியதை தைரியமாக சொல்லி கொடுக்க மறுப்போம்.

- சத்யபிரியா, அம்மன்குளம்

கடுமையான சட்டம்

இனி லஞ்சம் குறையும் என நம்பலாம். சட்டத்தை கடுமையாக்கி தண்டனை கொடுக்க வேண்டும். பொதுமக்களும் எந்த வேலைக்கும் பணம் கொடுக்க மாட்டேன் என உறுதியாக இருந்தால், லஞ்சம் முற்றிலும் ஒழிந்து விடும். நமது வேதனைகளை போக்க வந்துள்ள இந்த ஆட்சி தொடர வேண்டும்.

- சந்திரசேகரன், ஒண்டிப்புதுார்

தண்டனை கொடுக்கணும்

எந்த ஆட்சி வந்தாலும் லஞ்சத்தை ஒழிக்க அனைவரும் உறுதி எடுக்க வேண்டும். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு மக்கள் முன் தண்டனை கொடுத்தால் அடுத்து வரும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை நிறுத்துவர். இதே போல மதுவையும் ஒழித்தால் மக்கள் நலமுடன் இருப்பர்.

- ஸ்டெல்லா, வடவள்ளி

லஞ்சமில்லா நிர்வாகம்

விஜய் சினிமாவில் வசனம் பேசுவதுபோல் மக்களிடம் பேசுகிறார் என விமர்சிக்கின்றனர். கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரும் சினிமா துறையில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களில் யாரும் இதுபோல் பேசியதில்லை. இதை ஒரு நல்ல முன்னேற்றமாகவே பார்க்கிறோம்.

- அகிலேஷ், போத்தனுார்

மாற்றம் தெரிகிறது

அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது, பணம் கொடுத்தால்தான் உதவிக்கு வருகிறார்கள். இந்த ஆட்சி வந்த பிறகு, எங்கள் பஞ்சாயத்தில் முன்பு 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குப்பை அள்ளிச் சென்றனர். தற்போது வாரத்திற்கு ஒருமுறை அள்ளுகின்றனர். மாற்றம் தெரிகிறது

- சீதா, சத்தியமங்கலம்

மக்களின் தைரியம் அதிகரிக்கும்

லஞ்சம் வாங்கினால் அதுதான் அவர்களின் கடைசி ஊதியம் என்கிற நிலை வந்துள்ளது. பணிக்கொடை உள்ளிட்ட எல்லா சலுகைகளும் தடைபடும். வேறு வேலைக்கு செல்ல முடியாது. சமீபத்தில் எனக்கு தெரிந்த ஒருவர் பத்திரப்பதிவு சென்றபோது, பணம் கொடுத்துள்ளார். அதிகாரி வாங்க மறுத்துள்ளார்.

- லுார்துசாமி, புலியகுளம்

புகார் எண் வேண்டும்

முதல்வர் தலைமையில் அதிகாரமிக்க, நம்பிக்கையான, நேர்மையான அதிகாரிகளை கொண்டு தனிக்குழு உருவாக்கவேண்டும். மக்கள் நேரடியாக புகாரை அனுப்ப எண்களை வெளியிட வேண்டும். புகார் விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். லஞ்சம் இல்லாத அரசு அலுவலகம் சாத்தியம் ஆகலாம்.

--அனுராதா, சலீவன் வீதி

லஞ்சம் கேட்டால் நடவடிக்கை

காமராஜர் ஆட்சி காலத்தில் லஞ்சம், ஊழல் இல்லை. அதே போல இந்த ஆட்சியும் இருக்கும். அரசு ஊழியர்கள், அதிகாரிகள் எந்த துறையில் இருந்தாலும் அவர்கள் லஞ்சம் கேட்டால் தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சம் கேட்டால் தர மாட்டேன் என்று பொதுமக்களும் துணிச்சலுடன் கூற வேண்டும்.

-பார்த்திபன், புலியகுளம்

கல்வியில் லஞ்சம்

அரசு பணிகள் டெண்டர் எடுத்தால், 40 சதவீதம் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் ஒப்பந்த பணிகள் தரமற்றதாக இருக்கிறது. பள்ளி, கல்லுாரிகளில் நன்கொடை என்ற பெயரில் பணம் வசூலிக்கின்றனர். இதுவும் லஞ்சம் தான். இதை ஒழித்து கல்லுாரி படிப்பு வரை இலவச கல்வி அளிக்க வேண்டும்.

--மோகன்ராஜ், சவுரிபாளையம்

தைரியமாக புகாரளிக்க வேண்டும்

இதுபோன்ற அறிவிப்பு, அரசு மீது மக்களுக்கு நம்பிக்கையையும், லஞ்சத்துக்கு எதிராக குரல் கொடுக்க தைரியத்தையும் தரும். லஞ்சத்தை அரசால் மட்டும் தடுத்துவிட முடியாது. மக்களும் லஞ்சம் கொடுக்காமல், லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது புகார் அளிக்க வேண்டும்.

- அகிலாண்டேஸ்வரி, போத்தனுார்

அரசு சேவைகளுக்கு காலக்கெடு

'வேலை முடிந்தால் போதும்' என்ற எண்ணத்தில் பலரும் லஞ்சம் கொடுக்கின்றனர். இந்த நிலையை மாற்ற, அனைத்து அரசு சேவைகளுக்கும் கட்டாய காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். உரிய காரணமின்றி விண்ணப்பங்களை நிலுவையில் வைத்தாலோ காலதாமதம் செய்தாலோ, அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அரவிந்தன், குறிச்சி

மாற்றத்துக்கான அடித்தளம்

ஒரு முதல்வரே, யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என வெளிப்படையாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. முன்பைவிட லஞ்சம் குறைந்துள்ளதாக தெரிகிறது. முதல்வரே கூறியுள்ளதால், மக்களுக்கு கூடுதல் தைரியம் கிடைக்கும். விரைவில், தமிழகத்தில் மாற்றம் உருவாகும்.

- சுமேஷ், ஐ.ஓ.பி., காலனி

லஞ்சம் பெற்றவர்களுக்கு இடி

முதல்வர் விஜய் பேச்சு, லஞ்சம் பெற்று வாழ்க்கை நடத்தும் அனைவருக்கும் இடி விழுந்தது போல் இருக்கும். இனி யாரும் லஞ்சம் கேட்க மாட்டார்கள். அப்படி கேட்டால், முதல்வர் பெயரை சொல்ல வேண்டியதுதான். இதுவரை எந்த முதல்வரும் சொல்லாததை இவர் கூறியுள்ளதால், அதற்கு நல்ல 'எபெக்ட்' இருக்கும் என நினைக்கிறேன்.

-அசோக், நீலம்பூர்

Advertisement