கிரைம் கார்னர்
மின்சாரம் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநர் பலி
நீலாங்கரை: நீலாங்கரை, வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் ரவிகுமார், 28; ஆட்டோ ஓட்டுநர். இவரது நண்பர் முத்துகுமார், 32. ரவிக்குமாரின் வீட்டு மொட்டை மாடியில், நேற்று முன்தினம் இரவு இருவரும் மது அருந்தி உள்ளனர்.
அப்போது வீட்டை ஒட்டி சென்ற உயரழுத்த மின் கம்பியில் ரவிகுமாரின் கைது உரசியுள்ளது. இதை பார்த்த முத்துகுமார் நண்பரை காப்பாற்ற முயற்சித்தபோது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். சத்தம் கேட்டு உறவினர்கள் சென்று பார்த்தபோது, ரவிகுமார் உயிரிழந்தது தெரிய வந்தது. பலத்த தீக்காயமடைந்த முத்துக்குமார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவியிடம் அத்துமீறியவருக்கு தர்ம அடி
மாதவரம்: பிராட்வேயில் இருந்து மணலி நோக்கி, தடம் எண்: 38ஏ மாநகர பேருந்து, நேற்று முன்தினம் மாலை 30க்கும் மேற்பட்ட பயணியருடன் சென்று கொண்டிருந்தது. வியாசர்பாடி அருகே பேருந்து சென்றபோது, அதில் பயணித்த 20 வயது கல்லுாரி மாணவியிடம், பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அம்மாணவி அலறவே, சக பயணியர் அந்நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து, மாதவரம் காவல் நிலையம் ஒப்படைத்தனர். விசாரணையில், மாதவரம் அடுத்த பொன்னியம்மன் மேடைச் சேர்ந்த லிங்கப்பன், 45, என தெரிந்தது. வாடகை கார் ஓட்டுனரான அவர் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ஐ.டி., ஊழியரிடம் போன் பறித்த இருவர் கைது
பழவந்தாங்கல்: நங்கநல்லுாரைச் சேர்ந்தவர் சோம்நாத், 46; ஐ.டி., ஊழியர். இரு தினங்களுக்குமுன், நங்கநல்லுார் வோல்டாஸ் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், சோம்நாத் வைத்திருந்த மொபைல் போனை பறித்து தப்பி சென்றனர். பழவந்தாங்கல் போலீசாரின் விசாரணையில், ஆலந்துாரை சேர்ந்த வினோத்குமார், 21, மற்றும் 17வயது சிறுவன் என தெரிந்தது. இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், மொபைல் போன் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
வீட்டில் குட்கா பதுக்கி விற்றவர் கைது
செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி, சுனாமி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 43. இவர் வீட்டில், குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார். செம்மஞ்சேரி போலீசார், நேற்று இவரை கைது செய்து, 30 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கோவில் உண்டியல் உடைத்து திருட்டு
ஆவடி: திருமுல்லைவாயில், சரஸ்வதி நகரில் கருமாரி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 11ம் தேதி கோவிலுக்கு வெளியே வைத்திருந்த உண்டியல் திருடு போனது தெரிந்தது. ஓராண்டாக உண்டியல் திறக்கப்படாத நிலையில், அதில் 15,000 ரூபாய் காணிக்கை பணம் இருக்கலாம் என கூறப்படுகிறது. திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
நகராட்சி பூங்காவில் தனி அறை: திமுக கவுன்சிலர், ஆதரவு கும்பல் அடாவடிக்கு போலீஸ் சப்போர்ட்
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டர் வெளியீடு
-
மாயமான 3 மாணவர்களை ஊட்டியில் கண்டுபிடித்த போலீஸ்
-
பாய்லர் வெடித்து சாய ஆலையில் தீ விபத்து
-
போதை இல்லா சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
சுற்றுச்சூழல் மாசு பதிவு சான்று விசைத்தறியாளருக்கு அறிவுரை