சாலையோரம் ஆக்கிரமிப்பு கடைகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

திருநீர்மலை: திருநீர்மலை ஏரிக்கரையோரம் அதிகரித்து வரும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர். மேலும், ‘பீக் ஹவர்ஸ்’ நேரத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையில் பான்ட்ஸ் சிக்னலில் இருந்து திருநீர்மலை சாலை பிரிந்து செல்கிறது. நாகல்கேணி, திருநீர்மலை ஏரி, திருமுடிவாக்கம் வழியாக செல்லும் இச்சாலையை, தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்துகின்றன.

சமீபகாலமாக, திருநீர்மலை ஏரிக்கரையோரம், சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து வரிசையாக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்கடைகளுக்கு வருவோர், தங்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி செல்கின்றனர்.

இதனால், ‘பீக் ஹவர்ஸ்’ நேரத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். மேலும், விபத்து அச்சத்தில் மற்ற வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.

போலீசார் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளின் துணையோடு, ஆக்கிரமிப்பு கடைகள் போடப்பட்டுள்ளதால், யார் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சியும் இணைந்து, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement