புதுச்சேரிக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து விமான சேவை துவங்க நடவடிக்கை :கவர்னர் தகவல் 

புதுச்சேரி: பிராண்ஸ் நாட்டில் இருந்து புதுச்சேரிக்கு நேரடி விமான சேவை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.

புதுச்சேரி பிரெஞ்சுதுாதரகம் சார்பில் பிரெஞ்சு தேசிய தினம் பிரெஞ்சு துாதரகத்தில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு பேசுகையில், பிரஞ்சு தேசிய தினம் புதுச்சேரியில் கொண்டாடப்படுவது முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் பிரான்சுக்கும் புதுச்சேரி இருக்கும் இடையில் நீண்டகால வரலாற்று, பண்பாட்டு உறவுகள் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

புதுச்சேரியில்  3200 பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்டவர்கள் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள துறைமுகங்களை சுற்றுச்சூழல் சார்ந்த துறைமுகமாக மேம்படுத்த பிரெஞ்சு அரசு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

அதேபோல ஒருங்கிணைந்த குடிநீர் விநியோகத் திட்டம் , பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவியோடு புதுச்சேரியில் தொடங்கப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ், நீர் ஆதாரங்களை ஒருங்கிணைத்து, சுத்திகரிப்பு செய்து குழாய்கள் மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலமாக குடிநீர் தேவை உள்ள பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுபடுத்த புதுச்சேரி அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. பிரான்சில் இருந்து புதுச்சேரிக்கு நேரடி விமான சேவை கிடைக்கும். பிரெஞ்சு அரசு அதற்காக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை மக்களின் சொத்துக்களை பாதுகாக்க புதுச்சேரி அரசு அதற்காக தனி பிரிவு ஒன்றும் தொடங்கப்பட்டிருக்கிறது. நீங்கள் பிரான்சில் இருந்தாலும் உங்களுடைய உடைமைகள் பாதுகாக்கப்படும் என்றார்.

Advertisement