ஜல்லி, 'எம் - சாண்ட்' விற்பனை 'ஆன்லைன்' முறைக்கு மாறுமா? முறைகேடுகளை தடுக்க யோசனை

2

சென்னை: கட்டுமான பணிகளுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள கருங்கல் ஜல்லி, 'எம் - சாண்ட்' ஆகியவற்றின் விற்பனையை முழுமையாக, 'ஆன்லைன்' முறைக்கு மாற்ற, கனிமவளத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட இடங்களில், கருங்கல் குவாரிகள் செயல்படுகின்றன. இந்த குவாரிகளில் கிடைக்கும் கருங்கற்களை உடைக்கும் கிரஷர்கள், 3,000 எண்ணிக்கையில் உள்ளன.

ஆற்று மணலுக்கு மாற்றாக, கருங்கற்களை ஆலைகளில் துகளாக்கி, 'எம் - சாண்ட்' தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 456 எம் - சாண்ட் ஆலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நிறுவனங்களின் மொத்த உற்பத்தி திறனை விட, இரு மடங்கு அதிகமாக, எம் - சாண்ட் விற்பனை நடந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில், கிரஷர் உரிமையாளர்கள் கருங்கல் துகள்களை சலித்து, எம் - சாண்ட் என்று விற்பனை செய்கின்றனர்.

முறையாக கழுவி சுத்தப்படுத்தாத, இந்த எம் சாண்டை பயன்படுத்தினால், கட்டடங்களில் விரிசல்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதேபோன்று, அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகமாக கருங்கல் வெட்டி எடுக்கப்பட்டு, ஜல்லியாக விற்கப்படுகிறது.

இதில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டியது அவசியமாகிறது என, தமிழக மணல், எம் - சாண்ட் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நல சம்மேளன தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

அவர் கூறியதாவது:

தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகளில் முறைகேடுகளை தடுக்க, ஆன்லைன் முறை விற்பனை தொடங்கப்பட்டது. லாரி உரிமையாளர்கள், பொது மக்கள் ஆன்லைன் முறையில் பணம் செலுத்தினால் போதும்.

அவர்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டு, மணல் வழங்கப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில், கருங்கல் ஜல்லி, எம் - சாண்ட் விற்பனையை, ஆன்லைன் முறைக்கு மாற்றலாம்.

எந்தெந்த குவாரிகள், யார்டுகளில், கருங்கல் ஜல்லி எவ்வளவு இருப்பு உள்ளது என்பதை, வெளிப்படையாக தெரிந்து, கட்டணம் செலுத்தி மக்கள் வாங்கிக் கொள்ளலாம். மக்கள் செலுத்தும் கட்டணம் அரசின் கணக்கிற்கு நேரடியாக வந்து சேரும்.

அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே, கருங்கல் வெட்டி எடுக்கப்படுகிறது என்பதை, அதிகாரிகள் தினசரி அடிப்படையில் உறுதி செய்ய முடியும்.

இதே போன்று, எம் - சாண்ட் தயாரிப்பாளர்களும் ஆன்லைன் முறைக்கு வந்து விட்டால், விற்பனை வெளிப்படையாகி விடும்.

இது குறித்த விரிவான அறிக்கையை, கனிமவளத் துறை அமைச்சர் பிரபுவிடம் அளித்து இருக்கிறோம். நல்ல முடிவு எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement