பைக் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலி

சேத்தியாத்தோப்பு: பாளையங்கோட்டையில் பைக் மீது டூரிஸ்ட் வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை கீழ்பாதி பொட்டகுளம் தெருவைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் பிரவீன்குமார், 30; திருமணமாகவில்லை. நேற்று முன்தினம் மாலை பிரவீன்குமார் தனது பைக்கில் அதே பகுதியைச் சேர்ந்த நண்பன் மணிகண்டன், 27; என்பவருடன், பாளையங்கோட்டை நான்குமுனை சாலை சந்திப்பை கடக்க முயற்சித்தார். அப்போது, ஸ்ரீமுஷ்ணம் பகுதியிலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற மகிந்த்ரா டூரிஸ்ட் வேன் பைக் மீது மோதியது.

இதில் துாக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் கிடந்த பிரவீன்குமார், மணிகண்டன் ஆகிய இருவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பிரவீன்குமார் இறந்தார். மணிகண்டன் மேல்சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பிரவீன்குமார் தாய் அமுதா புகாரின் பேரில் சோழத்தரம் போலீசார் விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement