அரசு சாட்சியை கொல்ல முயற்சி சிறையில் திட்டம்; 2 பேர் கைது

தாராபுரம்: தாராபுரத்தில் கொலை வழக்கு அரசு சாட்சியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற வழக்கில், இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட் வக்கீல் முருகானந்தம் முன்விரோதம் காரணமாகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் புகார்தாரரும், முதன்மை அரசு சாட்சியுமான கணபதிபாளையத்தைச் சேர்ந்த தங்கவேல், 45, கடந்த 7-ம் தேதி டூவீலரில் சென்றபோது, காரில் வந்த மர்ம நபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், தாக்குதல் நடத்திய கும்பல் பொள்ளாச்சி அருகே தாங்கள் வந்த காரை தீயிட்டு எரித்துவிட்டுத் தப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்து, திட்டமிட்டுக் கொடுத்த தாராபுரத்தைச் சேர்ந்த நந்தகுமார், 52, கன்னியாகுமரியைச் சேர்ந்த பாபு, 38 ஆகிய இருவரைப் போலீசார் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர்.

ரூ.3 லட்சம் அட்வான்ஸ் போலீசார் கூறியதாவது:கைது செய்யப்பட்ட நந்தகுமார், ஏற்கனவே வக்கீல் கொலை வழக்கில் கைதாகி ஜெயிலில் இருக்கும் தண்டபாணியின் உறவினர் ஆவார்.

தங்கவேலுவைக் கொன்றுவிட்டால் வழக்கில் இருந்து தப்பித்துவிடலாம் எனச் சிறையிலிருந்தே இந்தச் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்காக பாபு என்பவரிடம் ரூ.3 லட்சம் முன்பணம் கொடுக்கப்பட்டு, அவர் வாயிலாக கேரளக் கூலிப்படை தாராபுரத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

சில நாட்கள் தங்கவேலுவை நோட்டமிட்ட கூலிப்படையினர், கடந்த 7-ம் தேதி வழி கேட்பது போல் நடித்து அவரை வெட்டியுள்ளனர்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்துக்கொண்டார். தப்பியோடிய கேரளக் கூலிப்படையைச் சேர்ந்த மேலும் 4 பேரைத் தீவிரமாகத் தேடி வருகிறோம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement