'இயற்கை விவசாயத்திற்கு உதவி செய்வதில் ஆத்ம திருப்தி!'

இயற்கை விவசாயிகளுக்காக பிரத்யேக அரிசி ஆலை நடத்தி வரும், கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்த 57 வயதாகும் இளவழகன்:

என் சொந்த ஊர் கடலுார் மாவட்டம், விளக்கப்பாடி கிராமம். அடிப்படையில் நானும் விவசாயி தான். சொந்த ஊரில், 8 ஏக்கர் நிலம் உள்ளது. முன்பு விவசாயம் செய்து வந்தேன்; இப்போது குத்தகைக்கு விட்டு விட்டேன்.

திருமணத்திற்கு பின் விருத்தாசலத்தில் குடியேறி, பீங்கான் பொருட்கள் உற்பத்தி செய்து வருகிறேன். விவசாயம் குடும்ப தொழிலாக இருந்தாலும், 1978ல் அரிசி ஆலை ஒன்றை என் அப்பா ஆரம்பித்தார். அதனால், எனக்கு அந்த தொழிலில் அனுபவம் உண்டு.

இயற்கையில் விளைந்த பாரம்பரிய அரிசி வகைகளை வாங்கலாம் என்று, சில இயற்கை விவசாயிகளை சந்தித்த போது, அரிசியை அரைப்பதற்கு அவர்கள் சிரமப்படும் விஷயம் தெரிந்தது. அதை மையமாக வைத்து, இந்த அரிசி ஆலையை ஆரம்பித்தேன்.

அரவை பணிகளை விவசாயிகள் நேரடியாக பார்க்கும் வகையில், 1.33 ஏக்கரில் ஆலையை வடிவமைத்து உள்ளேன். நெல்லை காய வைக்கும் களம், அதை ஊற வைப்பதற்கான தொட்டிகள், நீராவி வாயிலாக நெல்லை அவிக்கும் கட்டமைப்பு, நெல் மற்றும் அரிசியை பாதுகாப்பாக வைப்பதற்கான கிடங்கு என, அனைத்து வசதிகளும் இங்கு இருக்கின்றன.

காலை 5:00 மணிக்கே ஆலையில் வேலை துவங்கி விடும். விவசாயிகள் எவ்வாறு கேட்கின்றனரோ அவ்வாறு அரைத்து தருவோம். குறைந்தபட்சம், 5 மூட்டை நெல் கொண்டு வந்தாலும், அரைத்து தருவோம். அதே மாதிரி விவசாயிகள் முன்னிலையில் அரைத்து, மொத்த அரிசியையும் அவர்களிடம் கொடுத்து விடுவோம். ஒரு மூட்டையான 62 கிலோ நெல்லை அரைத்தால், 40 கிலோவுக்கு குறையாமல் அரிசி கிடைக்கும்.

இந்த மாதிரி ஒளிவு மறைவு இல்லாமல் செயல்படுவதால், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் வருகின்றனர். தினமும், 30 மூட்டைகள் நெல் அரைக்கிறோம். மழை காலங்களில் மட்டும் நெல்லை காய வைப்பது சிரமமாக இருக்கிறது. அதனால், அந்த சமயங்களில் அரவையை குறைத்து கொள்கிறோம்.

ஒரு மூட்டை நெல் அரைக்க, 400 ரூபாயும், அரை தீட்டல் முறையில் உமி நீக்க ஒரு மூட்டைக்கு, 500 ரூபாயும் கட்டணம் வாங்குகிறோம். ஒரு மூட்டை நெல் அரைத்தால், 100 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. மற்ற தொழில்களுடன் ஒப்பிடுகையில், இங்கு வேலை அதிகம்; லாபம் குறைவு.

ஆனால், தினமும் 10 பேருக்கு வேலை கொடுப்பதாலும், இயற்கை விவசாயத்திற்கு முடிந்தளவு பங்களிப்பு செய்வதாலும், ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது.

தொடர்புக்கு: 97867 34015.

***

Advertisement