திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ள புதிய மகளிர் போலீஸ் ஸ்டேஷன் கட்டடம்

முதுகுளத்துார்: - முதுகுளத்துார் டி.எஸ்.பி., அலுவலகம் அருகே திறப்பு விழா காணாமல் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் காட்சிப்பொருளாக உள்ளது.

முதுகுளத்துார் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெண்கள் ஏதேனும் புகார் அளிக்க வேண்டும் என்றால் பரமக்குடி, கமுதி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சென்று வரும் நிலை உள்ளது. இதனால் நாள் முழுவதும் வீணாகி வந்தது. இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு மகளிர் போலீஸ் ஸ்டேஷன் என்ற வகையில் புதிதாக முதுகுளத்துார் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டது.

தற்போது திறக்கப்பட்ட நாளிலிருந்து முதுகுளத்துார் வழிவிடு முருகன் கோயில் பின்புறம் உள்ள வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது. மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாக இதுவரை நிரந்தர கட்டடம் வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக முதுகுளத்துார் டி.எஸ்.பி.,அலுவலகம் அருகே ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் புதிதாக மகளிர் போலீஸ் ஸ்டேஷன் கட்டும் பணி முடிந்தது. தற்போது கடந்த சில மாதங்களாகவே திறக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது. வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போதுமான இடவசதி இல்லாமல் போலீசார் சிரமப்படுகின்றனர்.

எனவே திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் புதிய மகளிர் போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

––

Advertisement