பெண் போலீசை காதல் வலையில் வீழ்த்தி 97 சவரன் நகைகள், ரூ.42 லட்சம் மோசடி தி.மு.க., பிரமுகர் கைது
சென்னை: கணவரை இழந்த பெண் போலீசை, திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 97 சவரன் நகைகள், 42 லட்சம் ரூபாய் மற்றும் கார், பைக் வாங்கி மோசடி செய்த, தி.மு.க., பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
வேலுாரைச் சேர்ந்தவர், 41 வயதுடைய பெண். இவர், பொன்னேரி காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். கடந்த 2014ல் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர், 2016ல் நடந்த விபத்தில் உயிரிழந்தார்.
அதன்பின், 2024ல் சாத்தாங்காடு காவல் நிலையத்தில், குற்றப்பிரிவில் பணியாற்றியபோது, தி.மு.க., பிரமுகரான சென்னை திருவொற்றியூர், காந்தி நகர் 1வது தெருவைச் சேர்ந்த அப்பு என்கிற சிவராமன், 41, அறிமுகமானார்.
இவர் மீது ஐந்து வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக காவல் நிலையத்துக்கு வந்து செல்லும்போது, அப்பெண் போலீசிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது நாளடைவில் காதலாக மாறியது. அப்போது சிவராமன், தனக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மனைவியை விவாகரத்து செய்த பின், பெண் போலீசை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய அவர், பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள காவலர் குடியிருப்பில், ஆறு மாதங்களாக கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
அப்போது, தன்னிடமிருந்த, 97 சவரன் நகைகள், டைமண்ட் கம்மல், 42.70 லட்சம் ரூபாயை சிவராமனிடம் கொடுத்துள்ளார். மேலும், தவணை முறையில், ‘ஸ்கார்பியோ கார், ‘ராயல் என்பீல்டு பைக் வாங்கி தந்துள்ளார். ஆனால், சிவராமன் திருமணம் செய்யாமல் அலைக்கழித்து வந்துள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்பெண், மோசடியில் தொடர்புடைய சிவராமன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி, மே15ம் தேதி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம், ஜூன் 6ம் தேதி வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து ராயபுரம் போலீசார், வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்து வந்த சிவராமனை நேற்று கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு
-
மனு கொடுக்க மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்: தனிப்பிரிவு செயல்பாடுகளை ஆய்வு செய்வாரா முதல்வர்?
-
நகராட்சி பூங்காவில் தனி அறை: திமுக கவுன்சிலர், ஆதரவு கும்பல் அடாவடிக்கு போலீஸ் சப்போர்ட்
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டர் வெளியீடு
-
மாயமான 3 மாணவர்களை ஊட்டியில் கண்டுபிடித்த போலீஸ்
-
பாய்லர் வெடித்து சாய ஆலையில் தீ விபத்து