கட்டுப்படுத்த முடியாத ஈக்களின் தொல்லை :ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

கோத்தகிரி: கோத்தகிரி அரவேனு சுற்றுவட்டாரப் பகுதிகளில், மொய்த்து வரும் சிறிய ஈக்களின் பிரச்னைக்கு தீர்வு காணாததால், மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோத்தகிரி அரவேனு, கொட்டக்கம்பை, சேட்டுப்பேட்டை மற்றும் குஞ்சப்பனை பகுதிகளில், நுாற்றுக்கான குடியிருப்புகளில், கடந்த சில நாட்களாக, சிறிய வகை கருப்பு ஈக்கள் வீடுகளுக்குள் புகுந்து மொய்த்து வருவது தொடர்கிறது.

நடந்து செல்பவர்களின் தலைக்கு மேல் வட்டம் போடும் ஈக்கள் முகத்தை சுற்றுவதுடன், கண்களில் படுவதாலும், உணவு பொருட்களிலும் விழுந்து இறந்து விடுவதாலும் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். வீடுகளில், விளக்குகளை எரிய விடாமல் இருட்டில் இருந்தாலும் ஆயிரக்கணக்கான ஈக்கள் மொய்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம், கழிவு நீர் கால்வாய் உட்பட அசுத்தமாக உள்ள பொது இடங்களில், கொசு மருந்து அடித்தும், கிருமி நாசினி தெளித்தும் ஈக்களின் தொல்லை குறையவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த மக்கள், ஊராட்சி அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு அலுவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், தாசில்தார் மகேந்திரகுமார் முன்னிலையில், பி.டி.ஓ., விவேகானந்தன் உட்பட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர்.

அதிகாரிகள் கூறுகையில், 'இரு நாட்களுக்கு முன்பு ஈக்கள் ஆய்வுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன. அதன் முடிவு வரவில்லை. குறிப்பிட்ட பகுதிகளில், கொசு மருந்து மற்றும் கிருமி நாசினி பயன்படுத்தியும், ஈக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. சுகாதார துறையிடம் வேறு கிருமிநாசினி மருந்து கேட்கப்பட்டுள்ளது. அது வந்தவுடன் பொது இடங்களில் தெளிக்கப்படும். இவ்வகை ஈக்குளால் நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க, ஊராட்சி அலுவலகத்தில் மருத்துவ முகாம் நடத்தவும், நடவடிக்கை எடுக்கப்படும்,'என்றனர்.

Advertisement