குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்

விழுப்புரம்: வானுார் அடுத்த சிறுநாவூர் கிராமத்தினர், குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வானுார் அடுத்த சிறுநாவூர் கிராமத்தில் சில தினங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து, நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்குமாறு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் அளித்த மனு விபரம்:

சிறுநாவூர் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறையாால் மக்கள் அவதிபட்டு வருகிறோம். ஏற்கனவே பல முறை கோரிக்கை வைத்த பிறகு, கடந்த 2020ம் ஆண்டு புதிதாக சமுதாய கிணறு தோண்டி, அதன் மூலம் குடிநீர் கிடைத்தது. இருப்பினும்  கிராம மக்களின் குடிநீர் தட்டுப்பாடு தீரவில்லை. இதனால், விவசாய நிலங்களுக்குச் சென்று குடிநீர் பிடித்து வருகிறோம்.

ஊராட்சி தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் பற்றாக்குறை மட்டுமின்றி முழுமையான சாலை வசதி, கருமகாரிய கொட்டகை இல்லை. ஆக்கிரமிப்புகளால் சுடுகாடு பாதையும் இல்லை. எனவே, எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகளையும், குடிநீர் தட்டுப்பாட்டையும் சரிசெய்ய நடவடிக்கை வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Advertisement