8 மாதங்களுக்குபின் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்ட 5 வயது சிறுமியின் உடல் தாயின் புகாரை அடுத்து நடவடிக்கை

அம்பத்துார்: தவறான சிகிச்சையால் தன் குழந்தை உயிரிழந்து விட்டதாக தாய் அளித்த புகாரின்படி, எட்டு மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்ட 5 வயது சிறுமியின் உடல், மீண்டும் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

அம்பத்துார் அடுத்த அத்திப்பட்டு, செல்லியம்மன் நகர், பாரதி தெருவைச் சேர்ந்தவர் ஷீனு அலெக்சாண்டர், 38. இவர், ஜோர்டான் நாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜீஷா, 35. தம்பதிக்கு, 5 வயதில் நெஸ்லின் ரியா என்ற மகள் இருந்தாள்.

கடந்தாண்டு டிச., மாதம் 3ம் தேதி, நெஸ்லின் ரியாவிற்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அம்பத்துார், சி.டி.எச்., சாலையில் உள்ள, தேஜா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், 4ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த ஷீனு அலெக்சாண்டர் ஜோர்டனில் இருந்து நாடு திரும்பினார். பிரேத பரிசோதனைக்கு பின், திருவள்ளூரில் சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து, குழந்தைகள் நல மருத்துவர் அல்லாமல், பிற துறை மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால், தன் மகள் உயிரிழந்துவிட்டதாக, அம்பத்துர் போலீசில் ஜீஷா புகார் அளித்தார்.

மேலும், அண்ணாசாலையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் துறையில் புகார் அளித்தார். அதன்படி, மருத்துவ குழுவினர், சிறுமிக்கு வழங்கப்பட்ட சிகிச்சை மற்றும் மருத்துவமனையில் ஆய்வு செய்து, கடந்த மார்ச் மாதம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

அதில், சிறுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில், 13 தவறுகளை நடந்துள்ளது என, குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதன் அடிப்படையில், மருத்துவர்கள் சரோஜினி மற்றும் திக் விஜய் தேஜா ஆகியோர் மீது அம்பத்துார் போலீசில், சிறுமியின் தாய் ஜீஷா, மீண்டும் புகார் அளித்தார்.

அதன்படி, கடந்த மே மாதம் அம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதனிடையே, மீண்டும் பிரேத பரிசோதனை செய்வதற்காக, திருவள்ளூர் மருத்துவ கல்லுாரி முதல்வர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அம்பத்துார் இன்ஸ்பெக்டர் முன்னிலையில், சிறுமியின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது.

பின், திருவள்ளூர் மருத்துவமனைக்கு சிறுமியின் உடல் கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை நேற்று நடந்தது. புகாரில் சிக்கியுள்ள தேஜா மருத்துவமனையில், உள் நோயாளிகள் பிரிவிற்கு அனுமதி தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ கவுன்சிலின் விசாரணை முடிந்து, அறிக்கைக்காக பெற்றோர் காத்திருக்கின்றனர்.

Advertisement