வீட்டில் தனியாக இருந்த பெண் குத்திக்கொலை: பழவேற்காடில் நகைக்காக பட்டப்பகலில் கொடூரம்

பழவேற்காடு:பழவேற்காடில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்து, 11 சவரன் நகையை பறித்து சென்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

பழவேற்காடு, பாபநாசம் கோவில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மனைவி வனஜா, 55. இவர், வீட்டில் அரிசி மாவு அரைத்து விற்பனை செய்து வந்தார். இவரது கணவர், அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.

இரண்டு மகள்கள் சென்னையிலும், மகன் மீஞ்சூரிலும் வசித்து வரும் நிலையில், வனஜா தம்பதியர் பழவேற்காடில் தனியாக வசித்து வருகின்ரனர்.

இந்நிலையில், நேற்று காலை, கடையில் இருந்த கணவருக்கு, வனஜா தேநீர் கொடுத்துவிட்டு வீடு திரும்பினார். வழக்கமாக, பகல் நேரத்தில் மதிய உணவு கொண்டுவரும் மனைவி வனஜா, நேற்று மதியம் கடைக்கு வராததால், ராதாகிருஷ்ணன் மொபைல் போனில் தொடர்பு கொண்டார்.

நீண்டநேரம் தொடர்பு கொண்டும், வனஜாவிடம் இருந்து பதில் வராததால், ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருப்பதை கண்டார்.

அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு, ரத்த வெள்ளத்தில் வனஜா இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார்.

அவரது கழுத்தில் இருந்த தாலிச்சரடும், காது அறுக்கப்பட்டு, அதிலிருந்த கம்மல்களும் என, 11 சவரன் திருடுபோயிருந்தது. கழுத்தில் குத்தப்பட்ட நிலையில், கத்தி அப்படியே இருந்தது.

இது குறித்து தகவல் அறிந்த திருப்பாலைவனம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வனஜா தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள், நகைக்காக வீடு புகுந்து, கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பியது தெரிய வந்தது.

அதையடுத்து, பழவேற்காடு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்து, இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவம், பழவேற்காடு மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement