மகனிடமிருந்து சொத்துகளை மீட்டு தரக்கோரி தம்பதி தற்கொலை முயற்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மகனிடமிருந்து சொத்துகளை மீட்டு தரக்கோரி கணவன், மனைவி இருவரும் தீக்குளிக்க மண்ணெண்ணெய் ஊற்றிக்கொள்ள முயன்றதால் பரபரப்பு நிலவியது.

வாணாபுரம் அடுத்த பாக்கம் புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன், 63; இவர், தனது மாற்றுத்திறனாளி மனைவி செல்வியுடன் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார்.

அங்கு, ஜெயராமன் தனது மீதும், மனைவி செல்வி மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொள்ள முயன்றார்.

உடன், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஜெயராமனை தடுத்து நிறுத்தி, மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்தனர்.

விசாரணையில் ஜெயராமன் கூறியதாவது:

என் பெயரில் இருந்த ஒன்றரை ஏக்கர் நிலம், வீடு ஆகியவற்றை தானசெட்டில்மென்ட் பத்திரம் மூலம் மகன் தனசேகரன் வாங்கிக் கொண்டார். இதில், வீட்டினை தனசேகரன் விற்பனை செய்து விட்டார். அனைத்து சொத்துகளையும் கொடுத்து விட்டதால் எனது வருமானத்திற்கு வழியில்லை.

கடந்த 14 ஆண்டுகளாக எனக்கும், எனது மனைவி செல்விக்கும் உணவு, இருப்பிடம் மற்றும் மருந்து வாங்கி கொடுக்காமல் மகன் தனசேகரன் புறக்கணித்து வருகிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம்.

மகன் தனசேகரன் என்னிடமிருந்து வாங்கிய நிலத்திற்கான ஆவணத்தை ரத்து செய்து, எனது மனைவி செல்வி பெயரில் பட்டா மாற்றம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயராமன் தெரிவித்தார்.

இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரித்து ஜெயராமனை மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து கலெக்டரிடம் மனு அளித்து விட்டு சென்றனர்.

Advertisement