பட்டியலில் பெயர் இருந்தும் லேப்டாப் கிடைக்கவில்லை: கலெக்டரிடம் மாணவர்கள் புகார்

1

கோவை: இலவச லேப்டாப் வழங்குவதற்கான பட்டியலில் பெயர் இருந்தும், பல மாணவர்களுக்கு லேப்டாப் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தி.மு.க. ஆட்சியில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ், அரசு கல்லூரி மாணவர்களுக்கு முதற்கட்டமாக இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. பின்னர், அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து, தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

இதற்காக பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, குடும்ப பொருளாதார நிலை, தமிழ் புதல்வன், புதுமைப் பெண் போன்ற அரசின் உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் லேப்டாப் வழங்கப்பட்டது. இதில், பல மாணவர்கள் விடுபட்டுள்ளனர் என்ற புகார் ஏற்கனவே எழுந்தது.

இந்நிலையில், பட்டியலில் பெயர் உள்ள பல மாணவர்களுக்கு இதுவரை லேப்டாப் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது. சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மாணவர்கள் கூறுகையில், 'பிப்ரவரி 16ல் எங்கள் கல்லூரிக்கு லேப்டாப்கள் வந்தன. லாரியில் இருந்து அவற்றை நாங்களே இறக்கி வைத்தோம். விடுமுறை முடிந்து கல்லூரி திறந்த பிறகும் கொடுப்பார்கள் என நினைத்தோம். ஆனால் இதுவரை லேப்டாப் வழங்கவில்லை. படிப்பை முடித்து சென்ற இறுதியாண்டு மாணவர்களுக்கும் கிடைக்கவில்லை. எனவே, பட்டியலில் பெயர் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

Advertisement