‘60 நாட்களாகியும் வீடு பார்த்து குடியேறல...’ பிரேமலதா மீது தொகுதி மக்கள் அதிருப்தி

கடந்த 2006 சட்டசபை தேர்தலில், விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்.

பா.ம.க., கோட்டையில் வெற்றி வாகை சூடியதும், தொகுதி மக்களுக்கு லாரிகளில் குடிநீர் வினியோகம், கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள், அரசு மருத்துவமனைக்கு கட்டில்கள் என தனது சொந்த செலவில் எண்ணற்ற உதவிகளை செய்தார். இருப்பினும், அப்போதைய தி.மு.க., ஆட்சியில் சில திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.

அதன்பின், 2021 தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மனைவி பிரேமலதா வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனால், நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு, பிரேமலதா வெற்றி பெற்றார். இதன் மூலம் பொதுத்தேர்தலில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.

மேலும், விஜயகாந்த் போல தொகுதி மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

ஆனால், தி.மு.க., கூட்டணி தோல்வியை தழுவிய நிலையில், விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சியமைத்தது. இருப்பினும், தான் வெற்றி பெற்றதும், சட்டசபை தவிர்த்து மற்ற நாட்களில், விருத்தாசலத்தில் தங்கி, தொகுதி மக்களுக்கு சேவை புரிவேன் என பிரசாரத்தின்போது, வாக்குறுதி கொடுத்திருந்தார், பிரேமலதா.

அதன்படி, எம்.எல்.ஏ., அலுவலகம் அமைந்துள்ள பெரியார் நகர் தெற்கு, வடக்கு மற்றும் சேலம் புறவழிச்சாலையோர பகுதிகளில் வீடு தேடும் படலம் துவங்கியது.

முதல் சட்டசபை கூட்டத்தொடர் முடிந்து, அவர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வரும்போதே வீட்டில் பால் காய்ச்சுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எம்.எல்.ஏ., அலுவலகம் புனரமைக்காமல் இருந்ததால், தள்ளிப்போனது. இந்நிலையில், வெற்றி பெற்று 60 நாட்களாகியும், விருத்தாசலத்தில் எம்.எல்.ஏ., பிரேமலதா தங்கும் வகையில் வீடு எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இதனால், தொகுதி மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதுபோல், ஆளுங்கட்சியான த.வெ.க., அரசு மீது சட்டசபையிலும், வெளியிலும் முதல் குரலாக பிரேமலதா குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், விருத்தாசலம் தனி மாவட்டம், புறநகர் பஸ் நிலையம், அரசு மகளிர் கல்லுாரி, மணிமுக்தாற்றில் கழிவுநீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில் நகராட்சி பகுதியில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், வேளாண் பல்கலைக்கழகம் போன்ற நீண்டகால கோரிக்கைகள் நிறைவேறுமா என தொகுதி மக்கள் சந்தேகமடைந்துள்ளனர்.

Advertisement