காரைக்குடியில் இருந்து இயங்கும் எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரயில்கள்    மானாமதுரை வரை நீட்டிக்கப்படுமா  

சிவகங்கை:காரைக்குடி - சென்னை (பல்லவன்),திருச்சி,மயிலாடுதுறை ரயில்,ஏற்கனவே மானாமதுரை - மன்னார்குடி இடையே ஓடிய ரயில்களை தொடர்ந்து மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை திருச்சி, சென்னையுடன் இணைக்கும் விதமாக அதிகளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் என நுாற்றுக்கணக்கானவர்கள் சென்னை, திருச்சிக்கு தினமும் சென்று வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, சிவகங்கையை சேர்ந்த பயணிகள் ரயில் வசதியின்றி திருச்சிக்கு சென்று வருவதில் சிரமமாக உள்ளது. காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு தினமும் இயக்கப்படும் ரயில் மற்றும் காரைக்குடி - மயிலாடுதுறை ஆகிய ரயில்கள் அனைத்தும் காரைக்குடியிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி விடப்படுகின்றன. சென்னை செல்லும் பயணிகளுக்காக பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை காரைக்குடியில் இருந்து மட்டுமே தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பகல் நேர ரயில் போக்குவரத்தின்றி சிவகங்கை, மானாமதுரை நகர பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதை தவிர்க்க காரைக்குடி - திருச்சி, மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் மற்றும் 2012 முதல் மானாமதுரை - மன்னார்குடி வரை இயங்கி வந்த ரயில், சென்னை - காரைக்குடி வரை மட்டுமே இயக்கப்படும் (பல்லவன்) எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றை சிவகங்கை வழியாக மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

சிவங்கையில் இருந்து தேர்வாகி சென்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தெற்கு ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி பல்லவன் மற்றும் பாசஞ்சர் ரயில்களை மானாமதுரை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். //

Advertisement