தொல்லியல் துறை பராமரிக்கும் உண்டாங்கல் மலையில் தீ; சமூக விரோதிகள் அட்டூழியம்

சோழவந்தான்: விக்கிரமங்கலம் அருகே தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள உண்டாங்கல் மலையில் சமூகவிரோதிகள் தீ வைத்ததால் ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாயின.

விக்கிரமங்கலம் - செக்கானுாரணி ரோட்டில் குளத்துப்பட்டி பிரிவு அருகே உண்டாங்கல் மலை உள்ளது. இதில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் படுக்கைகளும், தமிழ் பிராமி கல்வெட்டுகளும் அமைந்துள்ளன. 'ஹெரிடேஜ் வாக்' பயணங்களுக்கான முக்கிய இலக்காக இது விளங்குகிறது.

மேலும் மலை மீது அமைந்துள்ள பழமையான முருகன் சிலைபிரசித்தி பெற்றது. இம்மலை சமூகவிரோதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. இங்குள்ள முருகன் கோயில் அடிவாரத்தில் சமூக விரோதிகள் வைத்த தீயால் பல ஏக்கர் அளவில் பசுந்தாவரங்கள், மரங்கள் தீப்பற்றி எரிந்து சாம்பலாகி விட்டன.

சமூக ஆர்வலர் பால்பாண்டி கூறியதாவது: இம்மலைக்கு போதுமான பாதுகாப்பில்லை. இதன் அடிவாரத்தில் சமூகவிரோதிகள் போதையில் சிகரெட் புகைத்துவிட்டு தீ வைத்ததால் பசுமையான தாவரங்கள், மரங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டன. முருகன் கோயிலுக்கு அமைக்கப்பட்டிருந்த தெருவிளக்குகள் சேதமடைந்தன. ஏற்கனவே வெயில் வாட்டி வரும் நிலையில் இது போன்ற மரங்களை அழிப்பதால் இயற்கை சீரழிவு ஏற்படும். மாவட்ட நிர்வாகம் இம்மலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement