தொடந்து நீடிக்கும் அமெரிக்கத் தாக்குதல்கள்; ஈரான் கடும் எச்சரிக்கை


நமது நிருபர்




ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் தொடர்ந்து ஏழாவது இரவாக நீடித்தன. பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து பிப்., இறுதியில் போரை தொடங்கின. போர் தீவிரமடைந்த நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்து நீர்வழி பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது.

ஈரான் -அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மாதம் கையெழுத்தானது. இதில் முக்கிய அம்சமாக, ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தில் எவ்வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என, அமெரிக்கா தெரிவித்தது.

ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்ற சில வணிக கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததாக அறிவித்தார். இதனால், இரு தரப்பும் மீண்டும் பரஸ்பரம் தாக்குதலை தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் தொடர்ந்து ஏழாவது இரவாக நீடித்தன.

தொடர்ந்து ஏழாவது இரவு அமெரிக்கப் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது என அமெரிக்க மத்தியப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது. உள்கட்டமைப்புகளை அமெரிக்கா குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதல்கள் தொடர்ந்தால் பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

Advertisement