'வந்தே மாதரம்' தேசிய பாடலை இழிவுபடுத்தினால் 3 ஆண்டு சிறை!: புதிய மசோதா தாக்கல் செய்கிறது மத்திய அரசு

3

- நமது டில்லி நிருபர் -

'வந்தே மாதரம்' தேசிய பாடல் பாடுவதை தடுத்தாலோ அல்லது அவமதிப்பு செய்தாலோ, இனி குற்றமாக கருதும் வகையில் அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவுள்ளது. இதற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் வகையில், புதிய மசோதாவை பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்கிறது.

வங்க கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரம் பாடல், நம் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது. இப்பாடல், நாட்டின் தேசிய பாடலாக, 1950 ஜன., 24ல் அரசியலமைப்பு நிர்ணய சபையால் ஏற்கப்பட்டது. இப்பாடலை, மத்தியில் இருந்த முந்தைய காங்கிரஸ் அரசு ஓரங்கட்டியதாக பா.ஜ., தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.

குழப்பம்



இந்த சூழலில், வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை குறிக்கும் வகையில், கடந்த ஜனவரி முதல், அரசு நிகழ்ச்சிகளில் அப்பாடலை பாட வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது; குறிப்பாக, முழு பாடலையும் பாட அறிவுறுத்தியது.

எனினும், இப்பாடலை தொடக்கத்தில் பாட வேண்டுமா, கடைசியில் பாட வேண்டுமா என்பதில் தொடர் குழப்பம் நிலவியது. சமீபத்தில் கூட, இது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது.

அதில், 'அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய பாடலான வந்தே மாதரம், தேசிய கீதமான ஜன கண மன பாட வேண்டும்' என அறிவுறுத்தியது.

முதலில், வந்தே மாதரமும், அதை தொடர்ந்து தேசிய கீதமும் இடம்பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு தற்போது புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது, வந்தே மாதரம் பாடலை சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்ட தேசிய சின்னங்களின் பட்டியலில் சேர்க்கும் வகையில், புதிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

நாளை மறுதினம் தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரில், லோக்சபாவில் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முக்கிய பங்கு



அதன்படி, தேசியக்கொடி, தேசிய கீதம் போன்ற முக்கிய சின்னங்களுக்கு இணையான அந்தஸ்தை வந்தே மாதரம் பாடலுக்கும் வழங்குவதே இதன் நோக்கம்.

பார்லி.,யின் இரு சபைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின், வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு விளைவித்தாலோ அல்லது அவமரியாதை செய்தாலோ அல்லது அதை பாட மறுத்தாலோ அல்லது முழுமையாக பாட மறுத்து சில பகுதிகளை நீக்கி, சில வரிகளை மட்டும் பாடினாலோ, அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். இதற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது.

எதிர் காலத்தில் இச்சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் மற்றும் விளக்கப்படும் என்பதை தீர்மானிப்பதில், மத்திய அரசு தாக்கல் செய்யப் போகும் புதிய மசோதாவில் உள்ள அம்சங்கள், மிக முக்கிய பங்கை வகிக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் செஷாத் பூனாவாலா நேற்று கூறியதாவது:
வந்தே மாதரம் மீது தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் வெறுப்பு காட்டி வருகிறது. தேசியக்கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு இணையான கவுரவத்தை அப்பாடலுக்கு வழங்குவதை அக்கட்சியால் ஏற்க முடியவில்லை.

வரலாற்று பிழை



நாட்டின் முதல் பிரதமரான காங்கிரசைச் சேர்ந்த மறைந்த நேரு, முஸ்லிம் லீக்கின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, வந்தே மாதரம் பாடலை இரண்டு பகுதிகளாக பிரித்து வரலாற்றுப் பிழை செய்தார்.

முன்னாள் மற்றும் இந்நாள் காங்., தலைவர்கள் பலரும், முழு பாடலை பாடுவதை தவிர்க்க முயற்சி செய்கின்றனர். காங்கிரசை, அகில இந்திய காங்., என்பதற்கு பதில், தேச விரோத காங்கிரஸ் என மாற்றுவதே பொருத்தமாக இருக்கும்.

கேரளாவில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி வைத்துள்ளதால், அதன் அழுத்தத்தின் காரணமாகவே வந்தே மாதரத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement