விஷ ஜந்துக்களின் புகலிடமான காஞ்சிபுரம் தாசில்தார் குடியிருப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தாசில்தார் குடியிருப்பு, பராமரிப்பின்றி விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறியுள்ளது.

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம், 2020ல், 3 கோடி ரூபாய் மதிப்பில் அமைத்தபோது, தாசில்தார் வசிப்பதற்காக குடியிருப்பும் கட்டப்பட்டது. அரசு அதிகாரிகள் எந்நேரமும் மக்களின் தேவைக்காக பணியாற்றும் வகையில், இந்த குடியிருப்பு கட்டப்பட்டது.

ஆனால், இந்த குடியிருப்பில் தாசில்தார் வசிக்காததால், பல ஆண்டுகளாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக, கதவு, ஜன்னல் உள்ளிட்ட பொருட் கள் சேதமடைந்துள்ளன .

கட்டடத்தின் பல பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சுற்றுப்புறம் முழுதும், செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் வசிப்பிடமாக, இக்குடியிருப்பு மாறியுள்ளது.

அரசு நிதியில் கட்டப்பட்ட கட்டடம் பாழடைவதை தடுக்க, குடியிருப்பை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர, பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி கூறியதாவது:

ஆறு மாதங்கள் முன் வரை, குடியிருப்பு நல்ல நிலையில் இருந்தது. தாசில்தார்கள் குடியிருப்பில் தங்காததால் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இக்குடியிருப்பை சீரமைக்க நிதி கேட்கப்பட்டுள்ளது. கிடைத்தவுடன் சீரமைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement