முருங்கை விவசாயிகளுக்கு பயிற்சி

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சியில், முருங்கை சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தைப்படுத்தும் வாய்ப்பு குறித்த பயிற்சி நடைபெற்றது.
தமிழ்நாடு பாசன மேலாண்மை திருச்சி பயிற்சி நிலையம் சார்பில், கரூர் மாவட்ட விவசாயிகளுக்கான முருங்கை சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தைப்படுத்தும் வாய்ப்பு என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி நடைபெற்றது. அரவக்குறிச்சி வட்டாரம், ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் நடந்த பயிற்சியில், முருங்கை சாகுபடியில் நவீன தொழில்நுட்பம், விளைச்சலை அதிகரிக்கும் முறைகள், நோய் மற்றும் பூச்சி மேலாண்மை, மதிப்புக் கூட்டல், சந்தைப்படுத்தும் வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.
தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலைய ஒருங்கிணைப்பாளர் ராமபிரபா நளினி வரவேற்றார். முதுநிலை விஞ்ஞானி வேளாண் அறிவியல் நிலைய முனைவர் திரவியம் மற்றும் அரவக்குறிச்சி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கவிதா, இணை இயக்குனர் (பயிற்சி) பேராசிரியர் இலக்குவபூபதி ஆகியோர், முருங்கை சாகுபடியில் விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து எடுத்துரைத்தனர்.
தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலைய தலைமையாசிரியர் திலகம், இணை ஆராய்ச்சியாளர் இனியா ஆகியோர் பங்கேற்றனர். பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertisement