நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிப்பது அவசியம்; அரசியலாக்க வேண்டாம் என்கிறார் கிரண் ரிஜிஜூ

புதுடில்லி: 'நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிப்பது மிகவும் அவசியமானது. இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்,' என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

லோக் சபாவில் அவர் பேசியதாவது; நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இருப்பதாக நேற்று கூறினோம். இன்று மீண்டும் சபாநாயகர் வாயிலாக அதனை தெரிவித்துக் கொள்கிறோம். காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் நாங்கள் தனிப்பட்ட முறையிலும் பேசியுள்ளோம். எங்களை நேரில் சந்தித்து உங்களின் ஆலோசனைகளை கூறுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். எதிர்க்கட்சிகள் விரும்பும் தேதியில், எவ்வளவு நேரத்திற்கு வேண்டுமானாலும் இரு அவைகளிலும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது.

எனவே, தயவுசெய்து விவாதத்தை எப்போது தொடங்குவது என்று எதிர்க்கட்சிகளே முடிவு செய்யுங்கள். நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் நீங்கள் நிபந்தனைகளை விதிக்கிறீர்கள். சாக்குப்போக்குகளை சொல்கிறீர்கள். நீங்கள் இப்படி செய்தால் விவாதத்தைத் தவிர்க்க விரும்புகிறீர்கள் என்று அனைவரும் புரிந்துகொள்வார்கள்.

இன்று, என்டிஏ எம்பிக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் வினாத்தாள் கசிவு குறித்து உடனடியாகவும், நாடு முழுவதற்கும் பொதுவான முறையிலும் விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். எந்தவொரு தேர்வாக இருந்தாலும், வினாத்தாள் கசிவு நடந்துள்ள அனைத்து மாநிலங்களைப் பற்றியும் விவாதிப்பது மிகவும் அவசியமாகும். இதை நாம் அரசியலாக்க வேண்டாம், இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement