‘இளைஞர்கள் காந்திய சிந்தனையை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்’

பொள்ளாச்சி: பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு காந்திய சிந்தனை என்ற பட்டய படிப்பு துவக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் மஞ்சுளவள்ளி வரவேற்றார்.

கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்து பேசுகையில், ‘‘காந்திய சிந்தனைகள் எக்காலத்துக்கும் ஏற்புடையவை. ஒரு கல்வி நிறுவனம், பட்டப்படிப்புக்கு தேவையான பாடத்திட்டங்களை மட்டும் பயிற்றுவித்தால் போதாது. அந்த படிப்போடு மனித விழுமியங்களை போதிக்கக்கூடிய காந்திய கொள்கைகள், தத்துவங்கள் போன்றவை கற்பிக்க வேண்டும்.

காந்தி ஒரு தேசத்தின் தலைவர் மட்டுமல்ல; உலகளாவிய சிந்தனை கொண்ட மனித மாண்பின் தலைவராக திகழ்ந்தார். இன்றைய இளைஞர்கள் அத்தகைய கொள்கைகளை வாழ்க்கையில் பின்பற்றல் வேண்டும்,’’ என்றார்.

திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலை முன்னாள் பேராசிரியர் பழனிதுரை பேசுகையில், ‘காந்திய சிந்தனை என்பது படிப்பதற்கு மட்டுமல்ல; ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் வாயிலாக பொருளாதார சமத்துவம் ஏற்படும். அதன் வாயிலாக சமுதாய முன்னேற்றத்தினால்  தேச வளர்ச்சி, உலகளாவிய அமைதி நிலவும்,’’ என்றார்.

முதன்மையர் முத்துக்குமரன், காந்தி சிந்தனை பாடம் குறித்து விளக்கினார். வரலாற்றுத்துறை தலைவர் மங்கையர்கரசி நன்றி கூறினார். இயக்குனர் சரவணபாபு, முதன்மையர் உமாபதி, நிர்வாக மேலாளர் ரகுபதி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement