டில்லி போராட்டத்தில் கிரிமினல் குற்றவாளிகள்; 2500 பேரை அடையாளம் கண்ட போலீசார்

12

நமது டில்லி நிருபர்



டில்லியில் போராட்டக்காரர்கள் கத்திகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்; 2,500க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை டில்லி போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா (சிஜேபி) இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. இதனால், போராட்டக்காரர்களை கலைக்க கைது நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்ட போதிலும், அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, சில இடங்களில் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் நிலைமையை சீர்செய்ய பாதுகாப்பு படையினர் முயன்றனர்.

மாணவர்கள் நடத்தி வரும் இந்தப் போராட்டத்தில் தேசத்துரோகிகள் ஊடுருவி இருப்பதாக கூறப்படும் நிலையில், அதனை உறுதி செய்யும் விதமாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கத்தி, வாள் மற்றும் கட்டை போன்ற பயங்கரமான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாதுகாப்பு படையினரை போராட்டக்காரர்கள் கண்மூடித்தனமாக தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது விசாரணையில், போராட்டக்காரர்கள் கத்திகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியது உறுதியானது.

ஜூலை 21ம் தேதி முதல் ஜூலை 23ம் தேதி வரை 2,500க்கும் மேற்பட்ட அத்தகைய நபர்களை டில்லி போலீசார் கண்டறிந்துள்ளனர். இதுவரை, வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக டில்லி போலீசார் 15க்கும் மேற்பட்ட எப்ஐஆர்களை பதிவு செய்துள்ளனர். போலீசார் மீதான தாக்குதல்கள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் குறித்த தனது விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Advertisement