பிரதமர் இல்லம் முன் காங்கிரஸ் நடத்திய போராட்டம் நேர்மையற்றது: சோனம் வாங்சுக் மனைவி விமர்சனம்

25

புதுடில்லி: பிரதமர் இல்லத்திற்கு அருகே காங்கிரஸ் நடத்திய போராட்டம் நேர்மையற்றது என சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி விமர்சித்துள்ளார்.

'நீட்' வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக கூறி பார்லியை நோக்கி புறப்பட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்புக்கு மோதல் ஏற்பட்டது. போலீசாரும், போராட்டத்தில் ஈடுபட்ட சிலரும் காயம் அடைந்தனர்.

போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திடீர் போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடி இல்லம் முன் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்டம், நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்துவோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி, காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

அவரது பேட்டி: பிரதமர் இல்லத்திற்கு அருகே காங்கிரஸ் நடத்திய போராட்டம் நேர்மையற்றது. அதற்குப் பதிலாக ஜந்தர் மந்தரில் மாணவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தி இருக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் இப்போது வாங்சுக் நற்பெயரை கெடுக்கின்றனர். பொதுமக்களை இனி ஏமாற்ற முடியாது. இது விழித்தெழுந்த இந்தியா. நேர்மையற்றவர்கள் இளைஞர்களால் தூக்கி எறியப்படுவார்கள்.

எங்களைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியும் இல்லை, அரசும் இல்லை. பார்லிமென்டே மிக உயர்ந்த அமைப்பு. கல்வியை அடிப்படை பிரச்னையாகக் கருதி பார்லி செயல்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். தங்கள் சொந்த நோக்கங்களுடன் வருபவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள்.

ஏனெனில் இந்த இயக்கம் நேர்மை மற்றும் தூய்மையிலிருந்து பிறந்தது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு எந்த அரசியல் தலைவர்களுடனும் தொடர்பு கிடையாது. இவ்வாறு கீதாஞ்சலி கூறினார்.

Advertisement