கள ஆய்வுக்கு சென்று 'கல்லா' கட்டும் அதிகாரிகள்!

1

ஏலக்காய் டீக்கு, 'ஆர்டர்' தந்தபடியே, ''ஆட்சி மாறியும், காட்சி மாறலை பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''எந்த துறையிலங்க...'' என கேட்டார் அந்தோணிசாமி.

''காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார்னு ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள் இருக்கு... தி.மு.க., ஆட்சியில், குன்றத்துாரைச் சேர்ந்த தா.மோ.அன்பரசன் அமைச்சரா இருந்தாரு பா...

''மாவட்டத்துல நடக்கிற வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய, மத்திய, மாநில அரசு அதிகாரிகள் வந்தா, அவங்களை குன்றத்துார் ஒன்றியத்துக்கு மட்டுமே, உயர் அதிகாரிகள் அழைச்சிட்டு போவாங்க...

''இப்ப ஆட்சி மாறியும், மத்திய, மாநில அரசு அதிகாரிகளை, குன்றத்துார் ஒன்றியத்துல இருக்கிற ஊராட்சிகளுக்கு தான், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தினர் அழைச்சிட்டு போறாங்க... மற்ற ஒன்றியங்களை கண்டுக்கிறதே இல்லை பா...

''அதுலயும், 'எங்களது துறை பணிகளை மட்டும் தான் ஆய்வு செய்றாங்க... மற்ற துறைகளை கண்டுக்கிறது இல்லை'ன்னு, ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் புலம்புறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''முன் தேதியிட்டு கையெழுத்து வாங்க பார்க்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''கடந்த தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிகள்ல, கோவை மாநகராட்சி பணிகள்ல நிறைய மோசடிகள் நடந்திருக்கு... குறிப்பா, செம்மொழி பூங்கா திட்டத்துல மட்டும், 40 கோடி ரூபாய் ஊழல் நடந்துட்டதா புகார்கள் இருக்கு ஓய் ...

''மாநகராட்சியில், ரெண்டு துணை அதிகாரிகள் இருக்கா... இதுல, தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட துணை அதிகாரியின் அதிகாரத்தை, நேர்மையான புதிய பெண் அதிகாரிக்கு மாத்தி குடுத்திருக்கா ஓய்...

''அந்தம்மா, 'டெண்டர் விடப்பட்ட பணிகளை நேர்ல ஆய்வு பண்ணி தான், 'பில்'கள்ல கையெழுத்து போடுவேன்'னு ஒப்பந்த நிறுவனங்களிடம் கறாரா சொல்லிட்டாங்க... இதனால, 'அக்கவுன்ட்ஸ்' பிரிவில் முன்தேதியிட்டு பில்களை தயார் பண்ணி, 'டம்மி'யாக்கப்பட்ட துணை அதிகாரியிடம் கையெழுத்து வாங்க, ஒப்பந்த நிறுவனங்கள் தரப்புல முயற்சி பண்ணிண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

ஒலித்த மொபைல் போனை எடுத்த பெரியசாமி அண்ணாச்சி, ''சரஸ்வதி மேடமா... குமரேசன் கிளம்பிட்டாரா...?'' என கேட்டு வைத்தபடியே, ''கள ஆய்வுக்கு போய் பாக்கெட்டை நிரப்பிக்கிடுதாவ வே...'' என்றார்.

''யாருங்க அது...'' என கேட்டார் அந்தோணிசாமி.

''சென்னையில், அடுக்குமாடி கட்டடங்களுக்கு பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., தான் ஒப்புதல் தரணும்... 'இதுக்கு கட்சி நிதி வசூலிக்கக்கூடாது'ன்னு, அரசு உத்தரவு போட்டிருக்கு வே...

''இதனால, அரசியல்வாதிகள் வசூல் வேட்டை நின்னுட்டு... ஆனா, கீழ் நிலை அதிகாரிகள், தங்களது வசூலை நிறுத்த மாட்டேங்காவ வே...

''அதாவது, கட்டட அனுமதி விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் தர்றதுக்கு முன்னாடி, சம்பந்தப்பட்ட நிலத்தை அதிகாரிகள் நேர்ல ஆய்வு செய்யணும்... பொதுவா, உதவி திட்ட அலுவலர் நிலையில் இருக்கிறவங்க தான் ஆய்வுக்கு போவாவ வே...

''இப்படி போறவங்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சாதகமா செயல்பட, வசூல் வேட்டை நடத்துதாவ... 'லஞ்ச ஒழிப்பு துறையினர் பார்வை இவங்க பக்கமும் திரும்பணும்'னு, பணம் குடுத்தவங்க புலம்புதாவ வே...'' என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

இளைஞர்கள் சிலர் பெஞ்சில் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement