கார் வாங்கி தருவதாக ரூ.3.69 லட்சம் மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் 

புதுச்சேரி: டில்லியில் குறைந்த விலையில் கார் வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.3.69 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.,பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

புதுச்சேரி, ஏனாம் வெங்கடாசலம் பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் ராஜகுமார் மனைவி ஷாலினி, 41. தனியார் நிறுவன ஊழியர். இவர் வீட்டின் அருகே குடியிருந்த மணிகண்டன் மற்றும் அவரது மனைவி கங்காதேவி ஆகியோர், டில்லியில் தங்களுக்குத் தெரிந்த ஏஜென்ட் சந்தீப் மூலமாக குறைந்த விலையில் கார் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் பல்வேறு தவணைகளாக 3 லட்சத்து 69 ஆயிரத்து 800 ரூபாயை ஷாலியிடம் வாங்கியுள்ளனர்.

பணத்தை பெற்று கொண்ட மணிகண்டன் மற்றும் அவரது மனைவி கங்காதேவி, காரை வாங்கி தராமல் காலம் கடத்தி வந்தனர். இதுகுறித்து ஷாலினி அளித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

அதில், மணிகண்டன் பெயரில் பழகிய நபர், திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் சேர்ந்த சையது முகமது புகாரி என்பதும், அவர் தனது அடையாளத்தை மறைத்து மனைவி கங்காதேவியுடன் இணைந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டது தெரிந்தது.

புதுச்சேரியை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் நாராயணனிடம், ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்ய ஆசைவார்த்தை கூறி ரூ. 4.53 கோடி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கடந்த மார்ச் மாதம்  சி.பி.சி.ஐ.டி. போலீசார் மூலம் மணிகண்டன், அவரது மனைவி கங்காதேவி ஆகியோர் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்திருப்பதும் தெரியவந்தது. 

இந்நிலையில், மணிகண்டன், கங்காதேவி தம்பதி மீதான பல்வேறு மோசடி வழக்குகளை சி.பி.சி.ஐ.டி., பிரிவு போலீசார் விசாரித்து வரும் நிலையில், அவர்கள் மீதான ஒதியஞ்சாலை போலீசில் கடந்த மாதம் பதிவு செய்யப்பட்ட, கார் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ. 3.69 லட்சம் மோசடி செய்த வழக்கும், டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்தரவின் பேரில், சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு நேற்று முன்தினம் மாற்றப்பட்டது.

Advertisement