சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தில் ‘ரெய்டு’ அலுவலக ஊழியர்கள் 2 பேர் மீது விஜிலென்ஸ் வழக்கு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனையடுத்து, 2 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு கட்டுவதற்கு அனுமதி, வீட்டுமனைப் பட்டாவிற்கு ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்யராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தில் ஒவ்வொரு அறைகளிலும் சல்லைடை போட்டு சோதனை மேற்கொண்டனர்.

அதில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் மொபைல் எண்களுக்கு ‘ஜிபே’, ‘போன் பே’ போன்ற யு.பி.ஐ., பணி பரிவர்த்தனை மூலம் சந்தேகம்படியாக 8 லட்சம் ரூபாய் பெறப்பட்டிருப்பது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் 2 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று வழக்குப் பதிந்தனர்.

மேலும், ‘ஜிபே’, ‘போன் பே’ மூலம் பெறப்பட்ட பணம் எதற்காக பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டது, இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். 

@block_B@ முழு பூசணியை சோற்றில் மறைக்கும் போலீஸ் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் சோதனையில் ‘ஜிபே’, ‘போன் பே’ மூலம் கணக்கில் வராத பணம் பெறப்பட்டுள்ளதாக 2 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். ஆனால், அவர்களின் பெயரை வெளியிட வேண்டாம் டி.எஸ்.பி., கேட்டுக் கொண்டுள்ளார். சாதாரணமாக அரசு அலுவலகத்தில் 50, 100 ரூபாய் லஞ்சம் வாங்கினால் கூட கைது செய்து, உடனடியாக பத்திரிகையாளர்களை போன் மூலம் அழைத்து அந்த நபரின் தந்தை பெயருடன், வயது, விலாசம் என அனைத்தையும் தெரிவிப்பது வழக்கம். அதுமட்டுமின்றி எங்கள் டீம்தான் பிடித்தது என டீமில் உள்ள அனைத்து பெயர்களையும் போடுங்கள் என மார் தட்டிக் கொள்வார்கள். ஆனால், நேற்று பிடிபட்டவர்கள் மீது வழக்குப் பதிந்தும் பெயரை போட வேண்டாம் என டி.எஸ்.பி., கேட்டுக் கொண்டதில் என்ன மர்மம் இருக்கிறது என தெரியவில்லை. இது முழு பூசணிக் காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் இருக்கப்பட்டவன், இல்லாதவன் என்றில்லை என்பது போலீசுக்கு தெரியாமல் போவது ஏன் என தெரியவில்லை.block_B

Advertisement