மனஸ்தாபங்கள் விரைவில் சரியாகி விடும்: நிர்வாகிகள் கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு

சென்னை : 'மனஸ்தாபங்கள் எல்லாம் விரைவில் சரியாகி விடும்' என, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சி பொதுச்செயலர்இபிஎஸ் பேசியுள்ளார்.


கோவை, திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணியும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் பங்கேற்கவில்லை.

ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கூறியதாவது:

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் கைப்பற்றினோம். ஆனால், தற்போது ஒரே ஒரு தொகுதியில் தான் வெற்றி பெற்றுள்ளோம். எனவே, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற, கோவை மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என, நிர்வாகிகள் சிலர் கூறினர். அதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் கட்சியினர் சிதறி கிடக்கின்றனர் என, நிர்வாகிகள் கூறினர்.


இதையடுத்து, குடும்பமாக இருக்கும் கட்சிக்குள், மனஸ்தாபங்கள் வரத்தான் செய்யும். எல்லா மனஸ்தாபங்களும் விரைவில் சரியாகி விடும். எனவே, நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருங்கள். தி.மு.க., மிகவும் பலவீனமாக இருக்கிறது. இந்த நேரத்தில், அரசு செய்யும் தவறுக்கு எதிராக, நாம் தீவிரமாக மக்கள் பணி செய்தால், நிச்சயம் நாம்தான் வெற்றி பெறுவோம் என இபிஎஸ் பேசினார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement