பிற மாநிலங்களுக்கு மாறும் பசுமை மின் திட்டங்கள்: முதலீட்டாளர்கள் அதிருப்தி

சென்னை: சூரியசக்தி, காற்றாலை மின்சக்தியை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்களுக்கு விண்ணப்பம் பெறுவது இரு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பம் பெறும் சேவையை தொடங்கவும் மின் வாரியம் தாமதம் செய்கிறது. இதனால், அத்திட்டங்களில் முதலீடு செய்ய இருப்பவர்கள் தங்கள் முதலீடுகளை, குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கு மாற்றும் நிலை உருவாகியுள்ளது.

இந்த திட்டத்துக்கு மின் வாரிய துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். கடந்த தி.மு.க., ஆட்சியில் சூரியசக்தி, காற்றாலை மின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மெகா வாட்டுக்கு தலா, 25 லட்சம் ரூபாய் கட்சி நிதியாக வசூலிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், மின் திட்டங்கள் ஒப்புதலுக்கு, கட்சி நிதி வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், மின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க காகித விண்ணப்பம் பெறுவதும் நிறுத்தப்பட்டது. இதுவரை விண்ணப்பம் பெறும் பணி தொடங்கப்படவில்லை. இது, முதலீட்டாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, முதலீட்டாளர்கள் கூறியதாவது:

அனைத்து நிறுவனங்களுக்கும் பாரபட்சமின்றி ஒப்புதல் அளிக்க, 'ஆன்லைனில்' விண்ணப்பம் பெறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இரு மாதங்களாகியும் இன்னும் ஆன்லைனில் விண்ணப்பம் பெறும் பணி தொடங்கவில்லை. விண்ணப்பமே இன்னும் பெறப்படாத நிலையில், அதை பரிசீலித்து ஒப்புதல் பெற மின் வாரியம் மேலும் தாமதம் செய்யும்.

இதனால், தமிழகத்தில் மின் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பிய பலர், தங்களின் முதலீடுகளை பிற மாநிலங்களுக்கு மாற்ற ஆயத்தமாகி வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “சூரியசக்தி, காற்றாலை மின் நிலையங்களை அமைக்க ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களுக்கு, 'லோட் புளோ ஸ்டடி' எனப்படும் ஆய்வுகளில், தற்போது, மறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் ஆன்லைனில் விண்ணப்பம் பெறும் பணியும் தொடங்கப்படும்'' என்றார்.

@block_B@ 'ஜெட்' வேகத்தில் குஜராத்


குஜராத்தில், 2025 செப்டம்பரில், 16,100 மெகா வாட்டாக இருந்த சூரியசக்தி மின் நிலையங்களின் நிறுவு திறன் இந்தாண்டு ஜூனில், 24,092 மெகா வாட்டாக அதிகரித்து உள்ளது. இதே காலத்தில் காற்றாலை நிறுவு திறன், 14,374 மெகா வாட்டில் இருந்து, 16,086 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது. ஒன்பது மாதங்களில் மட்டும், 7,992 மெகா வாட் சூரியசக்தி மின் நிலையங்கள், 1,712 மெகா வாட் காற்றாலை மின் நிலையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் தமிழகத்தில் ஜூன் நிலவரப்படி, அதிக திறன் உடைய சூரியசக்தி மின் நிலையங்களின் நிறுவு திறன், 12,410 மெகா வாட்; காற்றாலை மின் நிலையங்களின் நிறுவு திறன், 12,273 மெகா வாட்டாக உள்ளது.block_B

Advertisement