கடையை உடைத்து பொருள் திருட்டு  

சிவகங்கை, ஜூலை 25-சிவகங்கையில் ஒரே நாள் இரவில் 3 க்கும் மேற்பட்ட கடைகளை உடைத்து பொருட்களை திருடி சென்றுள்ளனர். சிவகங்கை பர்மா காலனியை சேர்ந்தவர் மருது 62. இவர் மதுரை ரோட்டில் சர்ச் முன் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று அதிகாலை 1:45 மணிக்கு டூவீலரில் வந்த 3 பேர் இவரது கடையில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி., கேமராக்களை உடைத்து, கடைக்குள் இருந்த ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

மதுரை ரோட்டில் போலீஸ் செக்போஸ்ட் எதிரே உள்ள கடையையும், காஞ்சிரங்காலில் உள்ள கடையையும் உடைத்து அங்கிருந்த பொருட்களை திருடி சென்றுள்ளனர். சிவகங்கையில் போலீஸ் சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர். இது தவிர ‛ஆல்பா 12’ என்ற டூவீலர் ரோந்து வாகனம், இரவு நேரத்தில் டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் ரோந்து என பல ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்ட போதும், மதுரை மெயின் ரோட்டிலேயே திருட்டு நடந்துள்ளது.

Advertisement