ரோடு அமைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சாணார்பட்டி, ஜூலை 25-

அத்திமடைபுரம் கிராமத்தில் கலெக்டர் உத்தரவில் ரோடு அமைக்கும் பணிக்காக ஆய்வு செய்த அதிகாரிகள் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

சாணார்பட்டி அருகே செங்குறிச்சி ஊராட்சி அத்திமடைபுரம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். செங்குறிச்சியில் இருந்து அத்திமடை காட்டிற்கு ரோடு வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நேற்று முன்தினம் தமிழர் தேசம் கட்சியினர், அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாணார்பட்டி ஒன்றிய அலுவலகம் முன் குடியேறும் போராட்டத்தை நடத்தினர்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் கிழக்கு தாசில்தார் பானுலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியர், தலைமை நில அளவையர் உள்ளிட்டோர் அப்பகுதியில் ரோடு அமைப்பதற்கு புலத்தணிக்கை செய்தனர். அப்போது அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டதோடு விரைவில் ரோடு வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவித்தனர்.

Advertisement