புதுச்சேரி பெண் கொலை வழக்கில் இளம் தம்பதி கைது கடன் பிரச்னையால் கொன்று நகைகளை திருடியது அம்பலம்

புதுச்சேரி: புதுச்சேரியில் கடன் பிரச்னையால் பெண்ணை கொலை செய்து நகைகளை திருடிய வழக்கில் இளம் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு குறித்து வடக்குப் பகுதி எஸ்.பி., வம்சிதர ரெட்டி கூறியதாவது:

புதுச்சேரி, கருவடிக்குப்பம், கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி, 48. இவரது மனைவி ரமணி 43; இவர் தனது மனைவியுடன் சேர்ந்த அதேப் பகுதியில், ஓட்டல் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மதியம், ரமணி அவரது வீட்டில், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஆன்லைன் மூலம் மளிகை பொருட்கள் வினியோகிக்கும், ரமணியின் சகோதரி மகன் சேதுநாதன், விபத்தில் சிக்கி அவரது வீட்டில் தங்கி இருந்தார். அவரது நண்பரான நாவற்குளம் அன்னிபெசன்ட் நகரை சேர்ந்த பிரவீன், 24, அவரது மனைவி ஈஸ்வரி,21, ஆகியோர் வீட்டிற்கு வருவதும், ரமணியுடன் நட்பாக பழகியதும் தெரிந்தது. கொலை நடந்த அன்று சேதுநாதன், பிரவீன், ஈஸ்வரி மூவரும், அப்பார்ட்மென்ட்டின் மாடிக்கு சென்று ஆன்லைன், கார்டு கேம், ரீல்ஸ் எடுத்து கொண்டிருந்தனர்.

அப்போது, பிரவீன், தனியாக வந்து, ரமணியிடம் ஒரு புடவையை பரிசாக இருப்பதாகவும், பின், ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் உள்ளதாகவும் கண்ணை மூட கூறி, தான் கொண்டு வந்த கல்லால், அவரது தலையில் பலமாக தாக்கினார். 

பின், அங்கிருந்த அம்மி கல்லால் மீண்டும் தலையில், தாக்கி, கத்திரிகோலால், கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில், குத்தியுள்ளார். அவர் சத்தம் போடாமல் இருப்பதற்காக, அங்கிருந்த துணியால், கழுத்தை சுற்றியும், வாயிலும் அடைத்துள்ளார். அவர் இறந்ததை உறுதி செய்த பின், அவர் அணிந்திருந்த, தாலி செயின் மற்றும் பீரோவில் உள்ள நகைகளையும் எடுத்துள்ளார். அங்கு இருந்த ரத்தக் கரையை அழித்துள்ளார்.

பின், பிரவீன் தனது மனைவி மற்றும் சேதுநாதனை சினிமாவிற்கு அழைத்தார். புதுச்சேரியில் டிக்கெட் கிடைக்காததால், கடலுாருக்கு அழைத்துள்ளார். பின், மூவரும் கடலுார் போகும் வழியில் சேதுநாதனுக்கு ரமணி இறந்தது குறித்து, தகவல் கிடைத்தும், புதுச்சேரி திரும்பினர்.

பார்ப்பதற்கு சந்தேகப்படும்படி இருந்த பிரவீன் மற்றும் அவரது மனைவி ஈஸ்வரி ஆகியோரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். தீவிர விசாரணையில் அவர்கள் தீவிர கடன் பிரச்னையால், நகைக்கு ஆசைப்பட்டு, கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்து, 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், இரண்டு மொபைல் போன், ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement