தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு

சென்னை: 'ஆந்திராவில் உயிரிழப்பை ஏற்படுத்திய, அதே வகை கொரோனா பாதிப்பு, தமிழகத்தில் இருந்தாலும் வீரிய தன்மை இல்லை' என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அண்டை மாநிலமான ஆந்திராவில், கொரோனாவின் தாக்கத்தால், சமீபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதில், தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களும் உயிரிழந்ததால், கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் ஏற்பட்டது.

தமிழகத்தில் உள்ள கொரோனா, எந்த வகை என்பதை கண்டறிய, மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுனத்திற்கு, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டன. ஆய்வு முடிவில், நாடு முழுதும் இருக்கும், குறிப்பாக ஆந்திராவில் பரவி வரும், ஒமைக்காரனின் ஆர்.எப்.5 வகை பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் கூறியதாவது:

தமிழகத்தில் தீவிர நீரிழிவு நோயாளிகள், நிமோனியாவால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு, அவை வீரியம் இல்லாத கொரோனாவாக தான் உள்ளது.

ஆர்.எப்.5 வகை, வீரியம் இல்லாத கொரோனா வகையை சார்ந்தது. இதனால், பொதுமக்களுக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை. பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய நிலையில், கொரோனா சமூகத்தில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement