'குதிரை பேர' வழக்கு: செந்தில் பாலாஜி சரண்

சென்னை: 'குதிரை பேர' வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், நேற்று சரண் அடைந்தார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி, இரு நபர் உத்தரவாதத்தை தாக்கல் செய்ததால், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி த.வெ.க., -- எம்.எல்.ஏ., இளையராஜா, 'என்னிடம் தொலைபேசியில் பேசிய சிலர், கட்சி மாறி ஓட்டளிக்க, 35 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசினர்' என, திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்தனர்.

இந்த வழக்கில், தேர்தல் கருத்து கணிப்பு நிறுவனம் நடத்திய திருநாவுக் கரசு உட்பட, 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன் பின்னணியில், செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் இருப்பதாக தகவல் வெளியானது. அவர்களை கைது செய்ய, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அவர்கள் இருவரும் முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இருவருக்கும் முன்ஜாமின் வழங்கியது.

'உத்தரவு நகல் கிடைத்த 15 நாட்களுக்குள், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவரும் சரண் அடைந்து, 25,000 ரூபாய்க்கான சொந்த ஜாமினும், அதே தொகைக்கான இரு நபர் உத்தரவாதமும் வழங்கி, ஜாமின் பெற்றுக் கொள்ளலாம்' என, நீதிபதி உத்தரவிட்டார்.

திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில், தினமும் காலை, மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், நேற்று செந்தில் பாலாஜி சரண் அடைந்தார்.

அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பரணிகுமார், உயர் நீதிமன்ற உத்தரவுபடி, இரு நபர் உத்தரவாதத்தை அளித்தார். இதை பரிசீலித்த நீதிபதி எஸ்.கார்த்திகேயன், அவரை ஜாமினில் விடுவித்தார்.

இதற்கிடையே, கரூரில், வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், நேற்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமின் பெற்றார்.

அசோக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராக வந்துள்ளார் என்பதை அறிந்த, தி.மு.க.,வினர் ஏராள மானோர், கரூர் நீதிமன்றத்தில் குவிந்தனர்.

Advertisement