சீனக்கொல்லி மண் சாலையை சீரமைக்க எதிர்பார்ப்பு
கூடலுார்: 'கூடலுார் மரப்பாலம் அருகே, சேதமடைந்துள்ள சீனக்கொல்லி மண் சாலையை, சிமென்ட் சாலையாக மாற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார் மரப்பாலம் விநாயகர் கோவிலில் இருந்து, சீனக்கொல்லி கிராமத்திற்கு மண் சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலையில், விநாயகர் கோவில் முதல், 200 மீட்டர் துாரம் சிமென்ட் சாலையாக சீரமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 1 கி.மீ., மண்சாலையை, சீரமைக்க நெல்லியாளம் நகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வனத்துறையின் தடையின் காரணமாக சாலை சீரமைக்க முடியாத நிலையில் உள்ளது.
இதனால், கிராம மக்கள் மண் சாலையில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, அவ்வப்போது பெய்து வரும் மழையில் இச்சாலை பல இடங்களில் சேதமடைந்து வருவதால் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் நடந்து செல்லவே சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, வனத்துறையின் அனுமதி பெற்று, இந்த சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.