அரசியல் நோக்கத்துடன் என் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது; அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு

19


திருச்சி: பழநியில் நிலத்திற்கு ரூ.100 கோடி மதிப்பு இருப்பது வழக்கிற்கு பின்பு தான் தெரியும்; அரசியல் நோக்கத்துடன் என் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது என அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சியில் நிருபர்களிடம் அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: எதை வைத்து அரசியல் பண்ண வேண்டும் என்று தெரியாமல் இதை வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் பழநியில் அப்படி ஒரு இட இருக்கிறது, அந்த இடம் ரூ.100 கோடி ரூபாய்க்கு மதிப்பு இருக்கிறது என்பதே எனக்கு இந்த வழக்கிற்கு பிறகு தான் தெரியும்.

நிலம் பத்திர பதிவு ஜூலை 7ம் தேதி நடந்து இருக்கிறது. ஜூன் 30ம் தேதியே அந்த நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் அரசு முறையீடு செய்துள்ளது. விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என நான் தான் முதல்வரிடம் நேரடியாக கோரிக்கை வைத்தேன்.

உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயமாக தண்டிக்கப்படும். அரசியல் நோக்கத்துடன் என் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது. எனது உறவினர்கள் இதை செய்துவிட்டார்கள், நான் தான் இதற்கு பின்னால் இருக்கிறேன் என பழி சுமத்துகின்றனர்.

இந்த மாதிரி எல்லாம் அரசியல் செய்து மக்கள் மத்தியில் என் பெயரை கெடுக்க வேண்டும், ஆட்சியின் பெயரை கெடுக்க வேண்டும். முதல்வரின் பெயரை கெடுக்க வேண்டும் என்று எல்லாம் யோசிக்காமல் மக்களுக்கு நல்லது பண்ண வேண்டும் என்று யோசித்தால் மக்கள் உங்களை கொஞ்சமாவது திரும்பி பார்ப்பார்கள்.
போராட்டம் நடத்தும் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று தெளிவாக முதல்வர் விஜய் கூறியிருக்கிறார். நீட் தேர்வை முற்றிலுமாக அகற்ற வேண்டும்; கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்; இது தான் நிரந்தர தீர்வு என முதல்வர் விஜய் கூறியிருக்கிறார்.

மாணவர்களின் போராட்டத்தை மதிக்கிறோம். சில பேர் இதுக்குள் புகுந்து முதல்வருக்கு எதிராக திருப்ப வேண்டும் என்று முயற்சியில் ஈடுபட்டார்கள் என்றால் அது அரசு எப்படி கையாள வேண்டுமோ, அதனை அப்படி கையாளும். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பரபரப்பு பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement