காங்., மாநில தலைவரை மாத்தலனா கட்சி காலி மேலிட பொறுப்பாளரிடம் நிர்வாகிகள் புகார்: வைத்திலிங்கத்துக்கு எதிராக போர்க்கொடி

ஜெயிச்ச காலமெல்லாம் போச்சு... இப்ப ஒரே ஒரு சீட்ல நிக்குற நிலைமைக்கு பரிதாபமாக வந்துட்டோமே... புதுச்சேரி காங்கிரஸ் வட்டாரத்தில் எதிரொலிக்கும் இந்த குரல், இப்போது டில்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி பெற்ற படுதோல்வி, அக்கட்சிக்குள் இருக்கும் உள்கட்சிப் பூசலை அனல் பறக்கும் அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. ஒரு காலத்தில் புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சிய காங்கிரஸ், இன்றைக்கு ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்ததற்கு முழுமுதற் காரணம் மாநில தலைவர் வைத்திலிங்கம் தான் என, அவரது சொந்த கட்சியினரே போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

வைத்திலிங்கத்தின் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் தவறான உத்திகள் தான் கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணம் என்பது அதிருப்தியாளர்களின் பிரதான குற்றச்சாட்டு. ஏற்கனவே புதுச்சேரி மேலிடப் பொறுப்பாளராக இருந்த கிரீஷ் சோடங்கரிடம், வைத்திலிங்கத்துக்கு எதிராக திரண்ட நிர்வாகிகள் அடுக்கடுக்கான புகார் மனுக்களைக் கொடுத்தனர்.

அதோடு நிற்காமல், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கேவையே டில்லியில் நேரில் சந்தித்து தலைவரை மாற்றவில்லை என்றால் கட்சி காலியாகிவிடும் என, மனு கொடுத்துவிட்டு வந்தனர்.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்திற்கு காங்., கட்சியின் மேலிடப் பொறுப்பாளராகப் புதிதாக நியமிக்கப்பட்ட காஷ்மீர் எம்.எல்.ஏ., குலாம் அகமது மிர், முதன்முறையாக நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்தார். தகவல் அறிந்ததும், வைத்திலிங்கத்தின் எதிர்ப்புப் பிரிவினர் சும்மா இருப்பார்களா.. அவர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கே நேரில் சென்ற நிர்வாகிகளின் ஒரு பிரிவினர், புதுச்சேரி தேர்தல் தோல்விக்கான அனாடமி ரிப்போர்ட்டை குலாம் அகமது மிர் கையில் கொடுத்து குமுறினர்.

சட்டசபை தேர்தலில் நாம வாங்கிய அடிக்கு, வைத்திலிங்கம் எடுத்த தவறான முடிவுகள்தான் காரணம். காங்., கட்சியில் 22 பேர் போட்டி போட்டாங்க. அதுல 11 பேருடைய டிபாசிஸ்ட் காலி. அதுவும் காங்., தலைவர் வைத்திலிங்கத்திற்கே 'டிபாசிட்' போய்ச்சு. அதனால் அவரை அந்தப் பதவியில இருந்து துாக்கினாத்தான் புதுச்சேரியில காங்கிரசை காப்பாத்த முடியும் என ஒரே போடாகப் போட்டுள்ளனர்.

காங்கிரசில் வைத்திலிங்கத்துக்கு எதிராக வீசத் தொடங்கியிருக்கும் இந்த உள்கட்சிப் புயல், மேலிடப் பொறுப்பாளர் குலாம் அகமது மிர்ரின் வருகையால் மேலும் வேகம் எடுத்திருக்கிறது. டில்லி தலைமை, இந்த வைத்திலிங்கம் மேட்டரில் உடனே அதிரடி நடவடிக்கை எடுக்குமா அல்லது வழக்கமான ஸ்டைலில் சமாதானப் படலத்தை நடத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement