அரசியலில் இருந்து துறவறம் பூணுகிறேன்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு
திண்டிவனம்: 'அரசியலில் இருந்து இன்று முதல் துறவறம் பூணுகிறேன். இனிமேல் அரசியலில் தலையிட மாட்டேன். அன்புமணி பார்த்துக் கொள்வார்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் ஏற்பட்ட மோதல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், கடந்த மாதம் 24ம் தேதி, ராமதாஸ் 62வது திருமண நாளின் போது, தைலாபுரம் தோட்டத்திற்கு குடும்பத்துடன் வந்த அன்புமணி, தந்தை ராமதாஸ் காலில் விழுந்து ஆசி பெற்றார். அதனைத் தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் ஒன்றாக இணைந்தனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை சார்பில், சரஸ்வதி கலைக்கல்லுாரியில் ராமதாஸ் 88வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின், ஒரே மேடையில் ராமதாஸ், அன்புமணி தோன்றினர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர். ராமதாசின் மூத்த மகளும், கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி பங்கேற்கவில்லை.
விழாவில் ராமதாஸ் பேசியதாவது:
தலைசுற்றல் காரணமாக கடந்த 20 நாட்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இன்னும் எனக்கு தலை சுற்றல் இருக்கிறது. உங்களோடு பேச வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், என்னுடைய உடல் ஒத்துழைக்கவில்லை.
இந்த நேரம் உங்களோடு அதிக நேரம் பேச வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், ஒரு செய்தியை மட்டும் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். இன்று எனக்கு 88 வயது ஆரம்பம். இன்றைய நாளில் ஒரு நல்ல செய்தியையும் உங்களுக்குச் சொல்கிறேன். இன்று முதல் நான் அரசியல் துறவறம் பூணுகிறேன்.
அரசியல் துறவறம் என்று சொன்னால், அரசியலைப் பேச மாட்டேன், அரசியலுக்கு வழிகாட்ட மாட்டேன். ஆனால், வருபவர்களை பார்ப்பேன், நலம் விசாரிப்பேன் அவ்வளவுதான். அரசியலில் நான் தலையிட மாட்டேன். அதை அன்புமணி பார்த்துக் கொள்வார்கள். அவர் உங்களுக்குத் துணையாக இருப்பார். நாங்களும் துணையாக இருப்போம்.
என்னைப் பார்க்க வருபவர்கள், 'ஐயா நல்லா இருக்கீங்களா?' என கேட்டுவிட்டுச் செல்லலாம். அங்கே அரசியல் பேசுவதற்கு ஏதுமில்லை. ஏனென்றால், நான் அரசியல் துறவறம் இன்றிலிருந்து மேற்கொண்டு இருக்கிறேன்.
உங்களோடு நீண்ட நேரம் பேச எனக்கு ஆசை இருந்தாலும் கூட தலைச்சுற்றல் வியாதி இன்னும் அவ்வப்போது எட்டிப் பார்க்கிறது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, உங்களை ரொம்ப நாட்களாக பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு இங்கே ஓடி வந்திருக்கிறேன்.
என்னை வாழ்த்துகிற உங்களுடைய மனது, நல்ல உள்ளம். உங்களுக்கும் எனக்குமிடையே இருக்கின்ற அந்த உறவு எப்போதும் மாறாது, அது நீடித்துக்கொண்டே இருக்கும்.
இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்வதால் என்னை வந்து தொந்தரவு செய்யாதீர்கள்.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
@block_B@ ராமதாஸ் அன்று சொன்னது தற்போது நிறைவேறியது ராமதாசின் மகள் வயிற்று பேரன் முகுந்தனுக்கு மாநில இளைஞர் சங்க பதவி கொடுத்ததால், ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, கட்சியே இரண்டாக பிளவுபட்டது. இந்த சமயத்தில் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினர். அதில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், டில்லியில் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவிற்கு ராமதாஸ் சென்றுள்ளார். திரும்பி விமானத்தில் வரும் போது, இனி கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று அன்புமணி தன்னிடம் கூறியதாக ராமதாஸ் வருத்தப்பட்டு கூறியிருந்தார். ராமதாஸ் ஏற்கனவே கூறியிருந்த படி, தற்போது, பா.ம.க., நிறுவனர் அரசியல் துறவறம் பூணுவதாக நேற்று அறிவித்துள்ளார். வருங்காலத்தில் கட்சியை அன்புமணியே பார்த்துக்கொள்வார் என்று ராமதாஸ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.block_B