ஆனைமலையாறு, நல்லாறு அணைகள் செயல்முறை திட்டம் குறித்து ஆய்வு
வால்பாறை: ஆனைமலையாறு - நல்லாறு திட்டப்பணிகள் குறித்து, எம்.எல்.ஏ.,க்கள் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர்.
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். வால்பாறையில் ஆண்டு தோறும் பருவமழையின் போது பெய்யும் மழை நீரை அணைகளில் தேக்கி வைத்து, குடிநீர் மற்றும் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 3.77 லட்சம் ஏக்கர் விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.
இந்நிலையில், 1972ல் போடப்பட்ட ஒப்பந்தப்படி கேரளாவில் இடைமலையாறு அணை கட்டிய பின், தமிழகத்தில், பி.ஏ.பி., திட்டத்தில் ஆனைமலையாறு - நல்லாறு அணைகளை கட்டிக்கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கேரள அரசு, இடைமலையாறு அணை கட்டி பல ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், தமிழகத்தில் ஆனைமலையாறு - நல்லாறு அணைகள் கட்ட கேரள அரசு அனுமதி வழங்கவில்லை.
இதனிடையே மாநில எல்லையில் ஆனைமலையாறு, நல்லாறு அணைகளை கட்ட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, சட்டசபை கூட்டத்தில வால்பாறை, பொள்ளாச்சி எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், ஆனைமலையாறு, நல்லாறு செயல்முறை திட்டம் குறித்து, வால்பாறை எம்.எல்.ஏ., சுதாகர், பொள்ளாச்சி எம்.எல்.ஏ., நித்யானந்தன், வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் சுப்ரமணியம், உதவி செயற்பொறியாளர் தண்டபாணி, பி.ஏ.பி., பாலாறு படுகை திட்டக்குழு தலைவர் பரமசிவம் ஆகியோர், மேல்நீராறு, கீழ்நீராறு ஆகிய அணைகளில் ஆய்வு செய்து, திட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.