மன அழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, ஏலூர் பிரிவு அருகே மன அழுத்தம் அதிகரிப்பால் பொக்லைன் உரிமையாளர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலுார் பிரிவு பகுதியில், முள் மரத்தில் ஆண் ஒருவர் துாக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்ட மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்ததில், இறந்தவர் சேலம் மாவட்டம், ஆத்துாரைச்சேர்ந்த பொக்லைன் வாகன உரிமையாளர் குமரேசன், 39, என்பது தெரியவந்தது.
இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு அடிக்கடி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த, 18ம் தேதி, யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியவர், அதன்பின், வீட்டிற்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.
அதன்பின், உறவினர்கள் போன் செய்தும் அவர் பேசவில்லை. இதனால், அவரை உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில், மன அழுத்தம் அதிகரிப்பால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.