பதிவு செய்யாத 'ஸ்பான்சர்' வாகனங்கள்: என்ன செய்கிறார்கள் நகராட்சி அதிகாரிகள்

வால்பாறை: வால்பாறையில், பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் வாகனங்கள் பதிவு செய்யப்படாமல் இயக்கப்படுகிறது.

வால்பாறை நகராட்சியில் உள்ள, 82 அரசு பள்ளிகளில் படிக்கும், 1,036 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. காலை நேரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் சிற்றுண்டி கொண்ட செல்ல வசதியாக, ஒன்பது வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், வால்பாறை நகரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் சார்பில் வழங்கப்பட்ட வாகனங்கள் கடந்த ஓராண்டாக, பதிவு செய்யப்படாமல் இயக்கப்படுகிறது.

நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்க வசதியாக, மொத்தம் ஒன்பது வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்தும் நகராட்சியின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் பேசி உடனடியாக வாகனத்திற்கு நெம்பர் பிளேட் பொருத்தப்படும்,' என்றனர்.

வங்கி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மாணவர்கள் நலன் கருதி மூன்று வாகனங்கள் ஸ்பான்சராக நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் தான் வாகனத்தை பதிவு செய்து, நெம்பர் பிளேட் பொருத்த வேண்டும். நீண்ட நாட்களாக வாகனங்கள் பதிவு செய்யாததால் அபராத தொகை செலுத்த வேண்டியுள்ளது. நகராட்சி அதிகாரிகள் பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர்,' என்றனர்.

மோட்டார் வாகன அதிகாரிகளிடம் கேட்ட போது, 'எந்த ஒரு வாகனமும் ஒரு மாதத்திற்குள் பதிவு செய்து, பதிவு எண் வாங்கிய பின் தான் இயக்க வேண்டும். விண்ணப்பித்த, 15 நாட்களில் வாகனத்திற்கு உரிய நெம்பர் வழங்கப்படும். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யாமல் ரோட்டில் வாகனங்களை இயக்கக்கினால் , அபராதம் விதிப்பதோடு, மேற்படி வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்,' என்றனர்.

Advertisement