'உலக' ஸ்குவாஷ்: அனாஹத் 'சாம்பியன்'

ஒன்டாரியோ: உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

கனடாவில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் நடந்தது. பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் ருகையா சலெம் மோதினர். அபாரமாக ஆடிய
அனாஹத் 3-0 (11-3, 11-7, 11-9) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் அனாஹத். இதற்கு முன், 2005ல் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்திருந்தார். கடந்த ஆண்டு இத்தொடரில் அரையிறுதி வரை சென்றிருந்த அனாஹத் வெண்கலம் கைப்பற்றினார். தவிர இவர், கடந்த 15 ஆண்டுகளாக சாம்பியன் பட்டம் வென்ற எகிப்து வீராங்கனைகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

டில்லியை சேர்ந்த அனாஹத் 18, கூறுகையில், ''ஜூனியர் பிரிவில் நான் பங்கேற்கும் கடைசி சீசனில் உலக சாம்பியன் பட்டம் வென்றதில் மகிழ்ச்சி. நான் இன்னும் கனவு காண்பது போல உணர்கிறேன்,'' என்றார்.

பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'உலக ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்த ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங்கை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இது, இளைஞர்கள் மத்தியில் ஸ்குவாஷ் போட்டி மீதான ஆர்வத்தை அதிகரிக்கும்,' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement